- ஓவியர் ரெ.இராஜராஜன்
ஒவியர்
திரு.விஸ்வம். தமிழக நவீன ஓவிய தளத்தின் நிகரற்ற ஓவியர். நெஞ்சையள்ளும் வண்ண
ஓவியங்களால் தனக்கென்ற பாதையை நிறுவிக் கொண்டவர். விஸ்வத்தின் ஓவியங்கள்
பரந்துபட்ட இயற்கையின் இயல்புகளை தன்னகத்தே உள்ளடக்கியது. அரூபவகை (Abstract)
ஓவியங்களை அழகாக்கிடும் பரிசோதனை எளிதன்று. அதை சாத்தியமாக்கிய
விஸ்வம் வெற்றி பெருமிதங்களால் முடக்கப்படாமல் இயற்கையை போலவே இயல்பாக
இயங்கிவருபவர். இவரின் நெடிய பயணமும், கடின உழைப்பும்
நிகழ்கால வளரும் கலைஞர்கள் உணரப்படவேண்டிய
கருப்பொருள். அறியப்படவேண்டிய அகப்பொருள்.
அரியலூர் மாவட்டம் கீழவன்னம் கிராமத்தில் விஸ்வம்
அப்பாசாமி 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ல்
பெருமைமிக்க விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஆர்வம் காரணமாக கும்பகோணம்
ஓவியக்கல்லூரியில் சேர்ந்து 5 ஆண்டுகள் பட்டயப்படிப்பும்,
அதன்பின் சென்னை ஓவியக்கல்லூரியில் ஓராண்டு முதுநிலை ஓவிய பட்டயப்
படிப்பையும் பயின்றார். மத்திய அரசு நிறுவனமான நெசவாளர் சேவை மையத்தின் (Weavers
Service Centre) துணி வண்ண வடிவமைப்பாளராக (Designer) பணிபுரிந்து
வந்தபோதும் அரசு பணி, நிறைவான ஊதியம் என்ற மாயைகளை தவிர்த்து
முழுநேர ஓவியராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி
வருகிறார். தேசிய அளவிலும், அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மண்டல அளவிலும் பல கலைக் கண்காட்சிகளிலும், கலை முகாம்களிலும், ஓவிய பட்டறைகளிலும் கலந்து
கொண்டு 23க்கு மேற்பட்ட குழு கண்காட்சிகளிலும், பல தனிநபர் கண்காட்சிகளையும், ஓவிய செயல்விளக்க
நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற
நாடுகளிலும் ஓவிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளதோடு, “விகடன்”
குழுமத்தினரால் தமிழகத்தின் பலநகரங்களில் 2001ல்
நடத்தப்பட்ட “கலர் கலாட்டா” எனும்
பள்ளி மாணவர்களுக்கான ஓவிய பயிற்சிப்பட்டறையின் தலைமை
ஓவியராக செவ்வனே பணியாற்றிய பெருமையும் கொண்டவர்.
1995ல் மத்திய லலிதகலா அகடமியின் தேசிய விருதினையும், அகில இந்திய AIFACS விருது உள்ளிட்ட மாநில
விருதுகளையும் பெற்று தொடர்ந்து இயங்கிவரும் விஸ்வம் ஓர் ஆளுமை மிக்க அழகியல்
கோட்பாடு இவரின் ஓவிய உலகத்தினுள் உயிர்மையாக இன்பமூட்டும் இயற்கை! சங்க
இலக்கியங்களில் காணப்படுகின்ற குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற
காட்சிப் புலன்கள் விஸ்வத்தின் கித்தான்களில் பொதிந்து கிடப்பதை உணரலாம். இச்சுவை
மிக்க கட்புல காரணிகளாக காணப்படும் சுவைப்படிமம் (Image Gustatory), இதில் பேசும் வண்ணங்களும், பேசாத பொருளும், வீசும் தென்றலும், கூசாத ஒளியும், மாசற்ற வண்ண குழைப்பும், நிலங்களை வளமாக்கிட வலிந்து
செல்லும் நதிகளாக திகழும் தூரிகை வீச்சுக்கள் யாவும் தரிசனம் தரத்தக்கவை. மறைந்து நிற்கும்
மனமும், அதில் சூழ்ந்து கிடக்கும் ஆன்மாவும், காணும் கண்கள் வாயிலாக பரவசப்படுவதை அனுபவித்து உணரக்கூடிய ஓவியங்களாக
விஸ்வத்தின் விலாசங்கள். விஸ்வத்தின் அழகு கோட்பாட்டியல் (Aestheticism) என்பது ஒரு தனிமனித அழகியல் வேட்கை மட்டுமல்லாது, சமூக
உயிர்மரபு (social Bio-genetic) தொடர்புடையது என்ற
கருத்தியலின் பொருட்டு நவீன ஓவிய தொடர்ச்சியுடன் விஸ்வத்தின் “வினையழகு” வாசிக்கப்படவேண்டும்.
1990க்குப் பிறகு பெரிய செல்வாக்கை பெற்றிருந்த சென்னையின் ஓவிய,
சிற்ப கலையின் நவீன போக்கில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், அனிமேஷன் போன்ற அறிவியல் சாதனங்களும் அதற்கான வேலைவாய்ப்பும் ஓவியத்துறை
மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. IT எனப்படும் Information
Technology ஓவியத்துறைக்கு புதிய பாதைகளை வகுத்தது. ஓவியக்கல்லூரிகளிலும் இத்தகைய
அறிவியல் வீச்சு, கலைகளைப் பயிலும் மாணவர்களை வேறு வேறாக
யோசிக்க செய்தது. பென்சில், கிரையான் போன்ற அடிப்படை
பயிற்சிகளின் மீதான ஆர்வம் குறைந்து மிக அதிக ஊதியம் தரும் அனிமேஷன், கிராபிக்ஸ் டிசைன், வெப்டிசைன் போன்ற
வேலைவாய்ப்புக்கு பொறுத்தமான சிந்தனைகள், ஓவியத்துறையை
குறிப்பாக ஓவிய கல்வியில் செய்முறை மீதான தொய்வை ஏற்படுத்தினாலும் மேற்கூறிய
வேலைவாயப்புக்கென இளம் ஓவிய பணியாளர்களை தேர்வு செய்யும் குழுவினர்
நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களிடம் பென்சில், பேனா மூலம்
வரைந்த ஓவிய, சித்திர வரைவுகளை எதிர்பார்ப்பதால் உண்மையான
உழைப்பின் வலிமையை உணரும் மாணவர்கள் அடிப்படை ஓவிய பயிற்சியை இளங்கலை பட்டபடிப்பை
(Bachelor of Fine Arts ) முடித்த பின்னும் பென்சில் பயிற்சி
எடுக்க வேண்டிய நிலையை ஓவியக்கலையின் விழுமியங்களை நிரூபிக்கத்தான் செய்கின்றன.
இந்த 21-ம் நூற்றாண்டின்
ஆரவாரமிக்க சென்னை கலைத்தளத்தின் நவீன ஓவிய சாம்ராஜ்ஜியம் தொழில் நுட்பம் சார்ந்த
நிகழ்கால கலைஞர்கள் கையில் இருப்பினும் கேன்வாஸ், ஆயில்
பெயிண்ட், அக்ரிலிக் போன்ற ஊடகங்களை முழுமையாக நம்பி
கண்காட்சி நடத்திவரும் ஓவியக்கலைஞர்களில் மிக குறிப்பிடத்தக்கவராக திகழ்பவர்
ஓவியர் விஸ்வம்.
ஓவியர் விஸ்வத்தின் ஓவியங்கள், அரூபவகையை சார்ந்தது. அரூபவகையெனில் கலைக்கண்காட்சிகளுக்கு (Art
Exhibitions) மட்டுமே உரியதென்ற கோட்பாட்டின் தடுப்பு சுவரையும்
தகர்த்துவிட்டு காணும் கண்களுக்குள் ஊடுருவி உள்ளத்துக்குள் வாசம் செய்யும்
மனோரஞ்சித தன்மை கொண்டது. சுவை மிக்க வர்ண கோவைகளும், வண்ண
நெகிழ்வுகளும் விஸ்வத்தின் ரம்மியமான ரசனையை பிரதிபலிப்பவை. காரம் செரிந்த சம்பாஷனைகளையும்,
ஆளுமை மிக்க சமூக உறவுகளை கொண்டிருக்கும். விஸ்வத்தின் ஓவியங்கள்
அவரின் புற இயல்புகளையும் கடந்த ஒரு ரகம், ஒரு வரம்.
டிசம்பர் மாத அதிகாலையில் பனியினூடே அசைந்தாடி வரும் அழகு தேவதையை போன்று
காண்போரின் உள்ளத்தில் ஊடுருவி கிரங்கச்செய்துவிடும் வசீகரமிக்க ஓவியங்கள்
விஸ்வத்தினுடையது. ஓவியம் ஓர் உணர்ச்சி பிரவாகம் எனும் பண்பட்ட புரிதல்களைக்
கொண்டிருக்கும் விஸ்வத்தின் படைப்புகளின் ஆளுமையாக இயற்கையின் மருவிய பிம்பங்கள்.
தென்றலாக, புயலாக, வெளியாக, அக்னியாக, அருவியாக தோன்றி ஓவியத்தினை காணும்
சுவைஞனை சென்று ஸ்பரிசிக்கும் அமைவு வசதியானது. ஓவியத்தின் கருப்பொருள் பற்றியோ,
வண்ண புலன்கள் பற்றியோ விஸ்வம் அருகிலிருந்து விளக்க வேண்டிய
அவசியம் இல்லாத ஒருவகை.
ஒரு
ஓவியம் பிரதியுருவாகவோ, மரபு, தளத்திலோ அமையாத, அரூபவகை அல்லது அரூபம் சார்ந்த வகை. ஓவியமெனில் அது அறிவியல் நோக்கில்
உணரப்படவேண்டும். இத்தகைய அணுகுமுறையின் சூத்திரங்களாக சிலபண்புகள்
சுட்டிக்காட்டப்படுகின்றன. அதில் ஒரு கட்டோவியத்தின் (Composition) கருப்பொருளோ, உயிர்மையோ நம் கண்களின் பார்வை
தன்மைக்குறிய பகுதியான கோல்டன் ரெய்ஷியோ (Golden Ratio) எனும் நுண்மையை, கலை அறிவியல்
கோட்பாடு பரிந்துரைக்கிறது. இது உணர்த்தப்படாத உன்னதம். இத்தகைய நுண்புலன்களை
கொண்டிருக்கும் விஸ்வத்தின் ஓவியங்களின் உண்மையில் அழகின்பிம்பம். இது மிகைப்பட
கூறல் (Exaggeration) அல்ல! இயற்கையை
ரசனைக்குட்படுத்தி மனக்கூறுகளின் தொடக்க தீர்வுகளில் தொடங்கப்பட்டு அந்தந்த
ஷனத்தில் சூழலில் ஏற்படும் தன்முனைப்பு உளவியல் வாயிலாக வர்ண குழைவுகளிலும் தூரிகை
இயக்கத்தின் லாவகம் கூறும் வழிகாட்டுதல் வாயிலாக கிளர்ந்தெழும் உணர்வுகளின்
வெளிபாடுகளே விஸ்வத்தின் படைப்புத்திறனுக்கு ஆதார ஸ்ருதி. இது ஒருவகை மனதினுள்
நடைபெறும் செயல்வடிவம் (Endoplasmic process).
இது உணர்ந்துக் கொள்ளக்கூடிய ரசனைக்குரியது.
ஆராதிக்கப்படும் கலைகளை விளக்க முடியாது. “கலை” எனும் எல்லையினை முழுமையாக இன்றுவரை விளக்கப்படவில்லை. அது உயிர்பொருளின்
ஆன்மாவை போல படைப்புகளில் ஜீவித்திருப்பது. அதுபோலவே “தரமுள்ளனஓவியம்”
என்று உள்ளத்தால் ஏற்றுக்கொண்ட பின் அவ்வோவியத்தின் தரத்தினை
உணர்த்திட எல்லை வரையறைகளை வகுக்க இயலாது. அவ்வாறு நோக்கப்படும்போது அது பிரதிமை சார்ந்த
லட்சனத்தை அடைந்துவிடும். உண்மையில் விஸ்வத்தின் ஓவியங்கள் 75 சதவிகிதம்
முன்திட்டமற்ற தொடக்கத்தில் பிரதிமையற்றதாக உருபெறுகிறது. முடிவில் அது அதிகாலையை
போன்று காட்சியளிக்கிறது. இன்றைய சென்னையின் நவீன
கலைத்தளத்தில் தொடர்ந்து ஓவியம் தீட்டிக் கொண்டு இயங்கிவரும் விரல்விட்டு
எண்ணக்கூடிய ஓவியர்களின் பட்டியலில் விஸ்வம் என்ற ஆளுமை திறன் வாய்ந்த ஓவியர்
முதலிடத்தில் இருப்பதை நாம் உணர்கிறோம். மிக நீண்ட கலை அனுபவ பின்ணியை கொண்ட
விஸ்வத்தின் தனித்துவம் ஒன்றே ஒன்றுதான். அது வண்ண ஆளுமை!. “ஆளுமை”
என்பது அறிவும், நுட்பமும், திறனும் ஒருங்கிணைந்த கூட்டிசைவு. இதை நாம் விஸ்வத்தின் தோழமையிலிருந்து
விலகி எதிர் கோணத்திலிருந்து காணவேண்டும்.
விஸ்வத்தின் ஆற்றல்களுக்கு ஊற்றுக்கண்ணாக அவரின்
திறன் வாய்ந்த தோழமைகள் .திரு .ஆதி மூலம் ,திரு .தட்சிணாமூர்த்தி
போன்றோர்களின் தொடர்புகள் விஸ்வத்தின் படைப்புகளுக்கு மட்டுமின்றி அவரது சமூக
உறவுகளுக்கும் ஓர் உத்வேகத்தை அளித்தது. கலைகள், ஒருவரிடமிருந்து
மற்றவர்களுக்கும், படைப்பாற்றலும், நுட்பமும்,
செய்திறனும், ஒவ்வொரு கலைஞனின் முயற்சியிலுமே
பரந்து விரிகிறது .தனித்திறம் எனும் (Creativity) என்ற அளவில் ஓவியர் விஸ்வம், ஓவியர் டக்ளஸ், ராம.பழனியப்பன், ஓவியர் முரளீதரன் போன்றோரின் படைப்புகள் வெவ்வேறான அணுகுமுறை அமைவுகள்.
நிகழ்கால சமூக உறவின் இறுக்கத்தை கொண்டுள்ள ஓவியர் விஸ்வத்தின் ஓவியங்கள் வெறும் படைப்பு அல்லது உருவாக்கல் என்ற நிலைப்பாட்டினையும் கடந்து மென்மையான, அழகியல். இயற்கையின் உபாசகரான விஸ்வம் இந்த நூற்றாண்டின் சென்னை கலைத்தளத்தின் அழகியல் ஆதிக்க ஆசனத்தில் அலங்கரிக்கப்பட வேண்டிய தவிர்க்கவியலாத தாரகை.