Friday, January 31, 2014


பூம்புகார் துறைமுகம் -ஓவியம்
ஓவியர்.ஆர்.ராஜராஜன்


"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலில் வந்த கருங்கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணக்கடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும் "

என விளித்துக்கூறப்பட்ட புகாரின் துறைமுகம் பல தேசத்து வணிகர்களின் உறைவிடமாக திகழ்ந்ததாக பட்டினப்பாலை,சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்கள் காலககன்ணாடியாக உருவகப்படுத்துகின்றன.இயற்கையாலும், அரசியல் மாற்றங்களாலும், நமது அறியாமையாலும்
தமிழகம் இழந்த பெருமையை மீண்டும் பெற்றிட வரலாறுகளை மீண்டும் வாசிப்போம். எதிர்கால தமிழகம் குறித்து யோசிப்போம்.நாமும் உயர்ந்து
உலகையும் உயர்த்துவோம்


.
சங்ககால பூம்புகார் துறைமுகம் -கற்பனை ஓவியம்

Thursday, January 30, 2014

தந்தை பெரியார் கொலாஜ் ஓவியம்.
ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

பிறவாய் பேரறிவே,
பிறந்திங்கு தருவாய்
பகுத்தறிவு பாலமுதை.
வகுப்பாய் வாய்மையெனும்
வாழ்வு நெறியை.

சுதந்திர சூட்சமத்தில்
ஆர்ப்பரித்த அரைகூவல்களை
மறக்க துவங்கினோம்.
அவலங்கள் கூட
மாலை மணம் வீசிட
மகுடம் சூட்டி
வீதியுலா செல்கின்றன,

தீயாய் பெருகும்
தீங்ககற்ற
திரும்பிவந்து
காப்பாய் ,காலத்தின்
காயங்கள் மறைந்திட.


கொலாஜ் ஓவியம்- ஆண்டு ,2011.

Tuesday, January 28, 2014

ஆண்டாள் 

ஓவியர்.ராஜராஜன்.


ஆண்டாள் 

வாரண மாயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரண நாட்டக் கனாக்கண்டேன் தோழீ ! நான்.........

மத்தளங் கொட்ட வரிச்சங்க நின்றூத
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ ! நான்......

குங்குமம் மப்பி குளிர்சாந்த மட்டித்து,
மங்கல வீதி வலஞ்செய்து மணநீர்
அங்கவனோடு முடன்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ ! நான்......... 

என அப்பேதை புலம்புகிறாள், 
கனவு மெய்படுமா?
காலம் கனியுமா? அவனை அடைதல் நிஜம்தானா?
..அவனின் ஸ்பரிசம் குறித்த அளவற்ற ஐயம் வாட்டி எடுக்கிறது.தோழிகளிடம் கேட்க முடியாத சங்கடமாக சந்தேகங்கள் பல,
எதுவும் அரியாத அவளுக்கு குறைந்த பட்சம் அன்பு குழைந்த முத்தம் எத்தகையது என்றாவது அறிய ஆவல்தான், ஆனால் யாரிடம் கேட்பது, வெட்கம் வேறு !துணிவை தடுக்கிறது.

பொறிதட்டியதைப்போல வந்தது புதிய சிந்தனை ,ஆம் வெண்சங்கு .அதுதானே அவனின் இதழ்பதித்து அன்டசராசரங்களுக்கு திருத்தகவல் அருளும் திருப்பொருள். சங்கடம் பார்காது சங்கிடம் கேட்டால் அது யாரிடமும் சொல்லாது அன்றோ !அதனிடம் கேட்டால் எம்பெருமானின் இதழ்சுவை பற்றி அறியலாமே என்றவளாய்,கேட்க துணிந்தாள்.

கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ ?
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

எத்தகைய உளவியல் உன்னதம், தமிழ் மொழியின் இனிமை மாறாத தீஞ்சுவை விருந்தாக ஆழ்வார்களின் பாசுரங்கள்.
எனது நண்பர் திரு.செல்வமணியை கடந்த வாரம் சந்தித்தபோது அவரது கையில் நாலாயிர ப்ரபந்தம்.நாச்சியார் திருமொழி பற்றி நிறைய பேசினோம். புதுச்சேரி வந்ததும் முதல் வேலையாக என்னிடம் இருந்த நாலாயிர ப்ரபந்த புத்தகத்தின் சில பகுதிகளை பார்த்தேன் தமிழும் ,இனிமையும்,பொருட்சுவையும்,கற்பனையும் கலந்த ஒன்றாக பாசுரங்கள், அது எனக்கு தந்த மகிழ்ச்சிதான் இந்த கோட்டோவியம். என் ஆர்வம் பக்திக்குறியதல்ல. அழகு தமிழின் விழுமியம் சார்ந்தது. 

இவ்வனுபவத்தை இந்த கோட்டோவியத்துடன் அன்பு நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்.

Monday, January 27, 2014"நாட்டிய பேராசான்"
காட்டுமன்னார் கோவில் முத்துக்குமரப்பிள்ளை.

ஓவியர்.ஆர்.ராஜராஜன்.


நாட்டிய பேராசான்  காட்டுமன்னார்கோவில் .முத்துக் குமரப்பிள்ளை


தற்கால நாட்டிய மரபின் மறுமலர்ச்சிக் கால மாமேதை. பரதக்கலை நட்டுவாங்கக் கலையின் தனிப்பெரும் ஆளுமை. சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார் கோயில் எனும் கிராமத்தில் 1874 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரு.முத்துக்குமரப் பிள்ளை அவர்கள் பிறந்தார்.இவரின் அக்காள் கண்ணம்மாள் இவரை விட மூன்று வயது மூத்தவர்.உள்ளூர் சிவன் கோவிலில் இறைப்பணி ஆற்றினார்.
காலம் காலமாக சதிர்கலையை சார்ந்திருந்த அந்த குடும்பம் காலச் சூழலுக்கேற்ப பரதக் கலையை பயிற்றுவிக்கும் சமூக மாற்றத்துக்கு நகர்ந்தது. தமது 19 ஆம் வயதிலேயே திரு. முத்துக்குமரப்பிள்ளை நாட்டியவகுப்பை குருக்குலமாக தொடங்கினார். அத்துடன் இசைவகுப்பையும் கவனித்தார்.தமிழ்,தெலுங்கு,சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அவரின் போதனைகளுக்கு பேருதவி புரிந்தன.

இவரிடம் நாட்டியம் பயின்ற பலர் காட்டுமன்னார் கோயில் நாட்டியமரபை உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று பிரகாசித்ததனர். எம்.கே.சரோஜா ( இவர் முத்துக்குமரப்பிள்ளையின் மகள்) மிருனாளினி சாராபாய்,முத்துசாமி பிள்ளை, கமலா, ராம்கோபால், நள நாஜன், ஜனக் கென்ட்ரி, போன்றவர்கள் குறிப்பிடதக்கவர்கள்.
கிராம வாழ்க்கையும், நகரவாழ்க்கையும் வேறுபாடின்றி பிள்ளையவர்களின் கலைத்திறனுக்குஏற்ப இயைந்து சென்றன. இசையிலும், நாட்டியத்திலும் திளைத்திருந்த மேதமையை செம்மையாக்கல் மூலமாக அறிவு வயமான எழுத்துவடிவமாக மாற்றிய முயற்சி அவருக்கு சாத்தியமாகியது. ஆம், 1921 ஆம் ஆண்டு "ஸங்கீத ஸ்வரக் ஞான போதினி" எனும் இசைநூலை எழுதிமுடித்தார்.அது 29 அத்தியாயங்களை உள்ளடக்கியது. அந்நூலை சென்னை திருவல்லிக்கேணி ரூபர்ட் அண்ட் கம்பெனியால் அச்சிடப்பட்டு, 2 ரூபாய் விலைக்கு வெளியிடப்பட்டது. 10.5.1943 ஆம் ஆண்டு இவரின் ஆறு மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை மாயவரம் பெரியகோவில் அவயம்பாள் சன்னதியில் மிக விமரிசையாக நோட்டிஸ் அடித்து முக்கியஸ்தர்களை அழைத்து நடத்தினார்.

கலை சிந்தனையால் மட்டுமே இவரது மனம் வியாபித்து இருந்ததால் பணம் மீதான கவணம் இல்லை. முதுமை, மேதமை இரண்டும் மனிதனை முடக்கிவிடும்.
தமது அளப்பறிய போதனைகளின் வாயிலாக பல மேதைகளை உருவாக்கிய இந்த மாமேதை வாழ்வின் இறுதிகாலத்தில் யாரிடமும் எந்த உதவியையும் பெற விரும்பவில்லை. 1959 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய சங்கீத நாடக அக்கடமி சேர்மனுக்கு ஓர் கடிதம் எழுதினார். பல நாட்டிய மாணவர்களை உருவாகினேன், எனது நட்டுவாங்க மரபு மிகுந்த மதிப்பு மிக்கது. வேறு யாரிடமும் உதவி பெற விரும்பாத நிலையை குறிப்பிட்டு , எனக்கு மாதம் ரூ.100/ மட்டும் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தால் எஞ்சிய காலத்துக்கு பயனாக அமையும், எனவே உதவி செய்யுங்கள் என கோரி இருந்தார். அவர் தனது 86 ஆம் வயதில் இயற்கை எய்தும் வரை அக்கடமியில் இருந்து எந்த பதிலும் வரவே இல்லை. இருப்பினும் அவர் நம்மோடு வாழ்ந்துகொன்டே இருக்கிறார் பதிவுகளாக.

அன்பு நண்பர்களே, எத்தனை மேதமைகள் , அபார திறமைகள் ,இருந்தாலும் நமது சமூக கட்டமைப்பு என்பது இதுதான்.

இவரை பற்றிய விரிவான கட்டுரை " ஸ்ருதி " செப்டம்பர் 1993 இதழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.நான் சில தகவல்களை மட்டும் மிக சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்.

Sunday, January 26, 2014


2006 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் காலண்டர் அச்சிடும் போது, அரசு திட்டங்களை மக்கள் கவணத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், பிரத்தியேகமாக 12 ஓவியங்களை தீட்டி அளித்தேன். குறிப்பாக புதுச்சேரியில் அசையா சொத்துக்களான மனைகள் ,நிலங்களை வாங்கும் போது அதை பெண்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் அதற்கு பத்திர செலவு பாதி கட்டணமே போதும் .இது மிக முன்னோடியான திட்டம், இன்றும் இங்கே புதுச்சேரியில் நடை முறையில் உள்ளது. இது போன்ற திட்டங்களை 12 மாதங்களுக்கும் வரைந்து கொடுத்தேன் . ஒவ்வொரு ஓவியமும், தீட்டப்பட்டு முடியும் தறுவாயில் அது உடணடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்றும் தலைமைச்செயலர் போன்ற அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் கிடைத்ததும்,ஓவியங்கள் முழுமை அடையும். பல ஓவியங்கள் சிறப்பாக வந்தன.2005 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இந்த பணி என்னிடம் வழங்கப்பட்டது, ஐந்து மாதங்களுக்கான ஓவியங்கள் நிறைவடைந்த சமயம் எனது மகள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டாள், 5 மணி நேரத்தில் சென்னை கொண்டு செல்ல வேண்டும் என பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியதால் சென்னை சென்று கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தோம், காலண்டர் பணியை இடையில் தடைபட்டதை அறிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்கள், செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். ஓவியர் ராஜராஜனின் மகள் அவசர சிகிச்சைக்காக சென்னையில் சேர்க்கப்பட்டுள்ளார்,அதனால் தாமதம் ஆகின்றது என்றனர். சரி வேறு யாரிடமாவது கொடுத்து பணிகளை முடிக்கலாமே என்றாராம், உங்களின் கவணத்துக்கு வரும் முன்னரே சில இடங்களில் கொடுத்தோம் ஐயா, ஆனால் ஓவியங்கள் முழுமையாக வேறுபடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரி அவர் எப்போது சென்னையில் இருந்து வருவார் என்று கேளுங்கள் என முதல்வர் சொன்னதும் எனக்கு போன் செய்து , சார் எப்போது புதுச்சேரி வருவீர்கள் ? என்றனர். இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவேன் , வந்ததும் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் முடித்து விடுகிறேன், முதல்வரிடம் நம்பிக்கையோடு தெரிவியுங்கள் என்றேன். டிசம்பர் 17 ஆம் தேதி எனது மகள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.புதுச்சேரி வந்ததும் உடனடியாக தடை பட்ட காலண்டர் ஓவிய பணியினை ஆரம்பித்தேன் 6 நாட்களுக்குள் முழுமையாக எல்லா திட்டங்களுக்கான ஓவியங்களும் முடிந்ததும், ஒரே வாரத்தில் புதுச்சேரி அரசு அச்சக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காலண்டரின் அச்சு வேலைகளை இரவு பகல் பாராது பணியாற்றி முடித்தனர். 2006 ஜனவரி முதல் தேதி புதுவை அரசு காலண்டரை வெளியிட்டது.அந்த காலண்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டிசம்பர் மாதம் வந்ததும் அந்த பணியின் நினைவுகள் வந்தது , 2006 , டிசம்பர் மாத பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூண்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கும் காட்சியை வரைந்திருந்தேன். அரசு திட்டங்களை ஓவியமாக வ்டிவமைக்கப்பட்ட காலண்டர் பற்றிய செய்தியை இந்து ஆங்கில நாளிதழும் ,மாலைமலர் நாளிதழும் விரிவாக செய்திகளை வெளியிட்டு இருந்தன. அந்த காலண்டரின் கடைசி பக்கத்தினை அன்பு நண்பர்களிடம், பகிர்ந்து கொள்கிறேன்.

புதுவை அரசு காலண்டர்-2006

Friday, January 24, 2014

தந்தை பெரியாரின் தஞ்சை சிறப்பு மாநாடு  -  3.11.1957
2007 ஆம் ஆண்டு வரையப்பட்ட கோட்டோவியம் இது. நான் வரைந்த தந்தை பெரியாரின் ஓவியங்களில் எனக்கு பிடித்தமானது இந்த காட்சி. ஏதோ ஒரு அவசர தேவைக்காக புதுச்சேரியின் தோழர் .வீரமோகன் கேட்டுக்கொண்டதால் 40 நிமிடங்களில் அரைப்பக்க காகிதத்தில் வரைந்து கொடுத்தேன்.மிக வித்தியாசமான கோணத்தில் அமைந்த இந்த கோட்டோவியம், புன்னகை புத்தக மையத்தின் பல வெளியீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மாதிரி படங்கள் எதுவுமின்றி கற்பனை வடிவமைப்பான இந்த படம் 53 வருடங்களுக்கு முன்பு, தந்தை பெரியார் அவர்களின் எழுச்சி மிக்க உரையை நாமே அருகில் இருந்து கேட்பது போல உணரலாம்

Thursday, January 23, 2014

அகத்தியர் சிற்பம்.
ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

அழகு மிக்க அகத்தியர் கருங்கற் படிமம். இது நாகப்பட்டிணம் மாவட்டம் ,செம்பனார்கோவில் அருகில் உள்ள "புஞ்சை" என வழங்கப்படுகின்ற திருநனிப்பள்ளி கிராமத்தில் உள்ள நற்றுணையப்பர் திருக்கோவிலின் தென்புறம் அமைந்துள்ளது.இக்கோவிலின் சிறப்புக்களில் முக்கியமானது கோவில் விமானம்.கருவரையில் உள்ள சிவலிங்கத்தின் மீது பூச்செரிய யானை உள்புறம் சென்று சுற்றி வரும் அளவிற்கான பிரம்மான்டமான அளவினைக்கொண்டது. அந்த பரப்பளவிற்க்கான கருவறைக்கு மேல் எழுப்பப்பட்ட விமானம் தமிழகத்திலேயே பெரியதென கூறப்படுகிறது.இக்கோவிலின் சுற்றுப் புறங்களில் உள்ள சுவர்களில் காணப்படும் கல்வெட்டுக்களின் நேர்த்தி அரிதானது. அத்துடன் சுற்றுப்புற சுவர்களில் காணப்படும் சிற்பங்கள்,மற்றும் தூண் அலங்காரங்கள் மிக தரமானது மட்டுமல்ல ,அரிதானது. சிற்பங்கள் மட்டும் பல்லவர் கால பாணியை நினைவு படுத்துகின்றன. இக்கோவிலின் அமைப்பு பல அரசர்களின் ஆட்சிகளில் ஏற்பட்ட திருப்பணிகளை உணரமுடிகிறது.
கோவிலின் உட்புறத்தில் அர்த்தமண்டபம் அருகே வாசலில் காணப்படும் துவாரபாலகர்கள் சிற்பங்கள் அற்புதமானவை. அவர்களின் கரங்களில் உள்ள ஆயுதங்கள் நிஜமான இரும்பில் வடிக்கப்பட்டதை போன்ற அபார செய் நேர்த்தி வியப்பை தருகிறது.
இந்த படத்தில் காணப்படும் அகத்தியர் சிற்பத்தினை பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆம் கருங்கல்லில் மேதமை மிக்க கலையாகம்.
இவை தவிர தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்வரர் வினாயகர் போன்ற சிற்பங்கள் சோழர்களுக்கு முந்தைய கலைப்பாணியை கொண்டதாக தெரிகிறது.
இத்திருக்கோவில் அமைந்துள்ள கிராமம் தான் திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மை பிறந்த தலம்.
பராந்தக சோழனால் கோவில் புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும், சுமார் 1400 வருட பழமை கொண்டது.சித்திரை மாதம் 7 லிருந்து 13 ஆம் தேதிவரை சூரிய பூசை நடை பெற்று வருவது இக்கோவிலின் சிறப்பு. ஆம் இந்த நாட்களில் காலை சூரியஒளி நேராக கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது விழுவது சிறப்புகளில் ஒன்று . கடந்த 2012 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி இக்கோவிலுக்கு நானும் எனது நண்பர் திரு அனீபாவும் சென்றோம், கோவிலின் கட்டுமானத்தையும்,சிற்ப அழகையும் கண் குளிர ரசித்தோம். கோவில் அர்ச்சகர் எங்களோடு இருந்து கோவிலை காண உதவினார்.இனிமையான நாள்.அகத்தியர் சிற்பம்-   நற்றுனையப்பர் திருக்கோவில் ,திருநனிப்பள்ளி.

Wednesday, January 22, 2014

தஞ்சை சோழர்கால சுதை ஓவியங்கள்- ஓவியர் ஆர்.ராஜராஜன்.

தமிழகத்தின் மிக உயர்ந்த தரத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் சில இடங்களில் மட்டுமே இன்று காணக்கூடிய நிலையில் உள்ளன. அவை சித்தன்ன வாசல் ஓவியங்கள்.மற்றொன்று தஞ்சை பெரியகோவிலில் "தட்சினமேரு " எனப்படும் விமானத்தின் உள்புற சுதை ஓவியம் ( true fresco painting ) இதைத் தவிர பனைமலை கோவில் சுதை ஓவியம் ,இது தற்போது மிக சிதைந்த நிலையில் உள்ளது.

தஞ்சை கோவிலின் சுதை ஓவியத் தொகுப்பு மிக உயர்ந்த படைப்பு.சோழர்களின் கலைரசனைக்கு காலக் கண்ணாடியாக திகழ்கிறது. கோவிலின் ஓர் பகுதியில் தீட்டப்பட்ட இந்த ஓவியம் ஏதோ ஓர் புராணக் காட்சியின் பதிவு மட்டுமல்ல. தமிழகத்தின் மிகப் பெரிய கோவிலின் கட்டுமானத்தை, வெகு நுட்பமான தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி எழுப்பப்பட்ட அரிய வகை கோவில் என்பதனையும் கடந்த வரலாற்று பெருமையை தாங்கிய ஓர் ஓவியப்பதிவு இது. கேட்க வியப்பாக இருக்கும் , ஆம் தஞ்சை பெரிய கோவிலைப்போல ஓர் கோவிலை முதலாம் ராஜேந்திரன் கங்கைகொண்டசோழபுரத்தில் எழுப்பினான். தஞ்சை பெரிய கோவிலை விட அதிக கலை நயமிக்க சிற்ப கருவூலமாக இரண்டாம் ராசராசன் தாராசுரத்தில் ஓர் கோவிலை எழுப்பினான். பிற்கால சோழர்கள் எண்ணற்ற கோவில்களை தொடர்சியாக அமைத்தாலும் தஞ்சை பெரிய கோவில் சுதை ஓவியங்களை பின்பற்றியோ,அதற்கு ஈடாகவோ வேறெங்கும் அமைக்க எந்த பேரரசரும் முயற்சிக்கவில்லை. காரணம் சுதை ஓவிய தொழில் நுட்பமும் ,அத்தைகைய எளிதன்று.இதுபோன்ற தரமான சுதை ஓவியங்களை உருவாககக்கூடிய பரவலான சூழல் அப்போது இருந்திருக்கவில்லை.இதன்றி ஓவியப் புலவர்களின் பற்றாக்குறையும் முதன்மை காரணமாக இருக்கக்கூடும்.
சுதை ஓவியம் என்பது எழில் மயமான காட்சிகளை உள்ளடக்கியது மட்டுமல்ல , தீட்டப்பட்ட ஓவியங்கள் கருங்கல்லால் எழுப்பப்படும் கோவில்களுக்கு ஈடாக ஆயிரம் வருடங்களை கடந்து நிறம் மங்காமலும், உதிர்ந்து கொட்டாமலும் வலிமை கொண்டதாக அத்தகைய சுதை ஓவியத் தொகுப்பு இருக்க வேண்டும்.

தஞ்சை சோழர்களின் சுதை ஓவியங்கள் மிக தரமான தொழில் நுட்பத்துடன் தீட்டப்பட்டதே. கி.பி.1003 க்கும் 1010 க்கும் இடையே எழுப்பப்பட்தாக கருதப்படும் தஞ்சை பெரிய கோவிலில் ஓவியப்பணிகள் கட்டுமான நிறைவு சமயத்தில் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட்டு இருக்கலாம்.
கருங்கல் சுவரில் கல்லிடுக்குகள் பூசப்பட்டு, களிமண்ணை புளிக்கவைத்து, பசைப்பொருள்கள், பிசினிவகைகள்,தேங்காய் நார் சேர்த்து மூலப் பூச்சு பூசி, கருங்கல்லுக்கு ஈடாக உலரவிட்டு, சுண்ணாம்பு காரை அரைத்து அதில் முட்டை வெள்ளைக்கரு,கடுக்காய்,மற்றும் இதர பாஷாணங்கள்,தங்கப் பொடி கலந்து இரண்டாம் பூச்சு பூசியப்பின், செப்புக் கரணை கொண்டு நுண்சாந்து பூசி,மெருகிட்டு ஈரத்துணியால் மூடி,மஞ்சள் கிழங்கு, அல்லது கரி கொண்டு புனையா ஓவியம் தீட்டி, சுவர் ஈரம் மேவிட பச்சிலை சாறுகள் , செங்காவி, மஞ்சள், மாவிதை ,அவுரி,நுனுக்கப்பட்ட வண்ணப் பொடிகள் கலந்து தீர்ர்க்கமாக திட்டமிட்ட காட்சிப்படலத்தை ,தூரிகை கொண்டு ஈரச்சுவரில் வண்ணம் ஊடுருவிடும் லாவகத்தோடு ஓவியமாக்குதலே சுதை ஓவியம் . இவ்வாறு தவறில்லாமல் தீட்டப்படும் ஓவியம் நன்றாக பராமரிக்கப்பட்டால், குறைந்த பட்சம் ஆயிரம் வருடம் முதல் அதிக பட்சம் ஐந்தாயிரம் வருடங்கள் கூட நீடித்து வரலாறு பேசும்.

கி.பி. 1010 க்கு பிறகு தஞ்சையின் வரலாற்று சூழல் சரி வர தெரியவில்லை.ராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தை தலை நகராக்கி ஆளத் துவங்கினான்.முதலாம் ராசராசன் பழையாறையில் கி.பி.1014 இல் இயற்கை எய்தினான். காலங்கள் ஓடின, சோழமண்டலம் பாண்டியர் வசமாகி பின் அவர்களது ஆட்சியும் மங்கிட கி.பி.1500 களில் பலவீணமான சோழமண்டலத்தை ஆந்திராவிலிருந்து வந்த நாயக்கர்கள் கை பற்றி ஆளத்துவங்கினர்.

நீண்ட காலம் ( சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் என கருதப்படுகிறது ) பூட்டப்பட்டு கிடந்த தஞ்சை பெரியகோவிலை சில திருப்பணிகளை செய்ய முற்பட்ட நாயக்க மன்னர்கள் சோழர்களின் சுதை ஓவியங்கள் மீது சுண்ணாம்பு கொண்டு பூசி நாயக்கர்களின் மரபு ஓவியங்களை தீட்டினார்கள். 400 வருடங்கள் நாயக்கர்களின் ஓவியங்களுக்கு கீழே மறைந்திருந்த சோழர்களின்சிவபுராண ஓவியங்கள் காலங்களால் சிதிலமடந்த சுண்ணாம்பு படலங்கள் வழியாக வெளிச்சத்தை காணதுவங்கின.

1930 களில் தமிழனின் கட்டிடக்கலை,சிற்பக்கலை,இலக்கியம் யாவும் சிறந்து நிற்க தமிழனின் ஓவியக்கலை எங்கே என தமிழகம் முழுவதும் தேடி அலைந்த அந்த மாமேதை,வரலாற்று ஆய்வாளர் தஞ்சை பெரிய கோவிலை அடைந்தார். அவர்தான் அண்ணாமலைப் பல்கலைகழக வரலாற்றுத்துறை பேராசிரியர். எஸ்.கே. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள். சுண்ணாம்பு படலத்தை சற்று நீக்கிய பின் உள்ளிருந்து தரிசனம் தந்த சோழர்களின் ஓவியத் தொகுப்பை கண்ணுற்று ஆனந்த கூத்தாடினார். உடனடியாக மத்திய தொல்பொருள் துறைக்கு தகவல் அனுப்பிவிட்டு, நான்கு நாட்களுக்குள் ஹிந்து நாளிதழில் ஓர் கட்டுரை வாயிலாக தஞ்சை பெரிய கோவிலின் ஓவியத்தொகுப்பை நிகழ்கால வரலாற்றுக்கு வழங்கினார்.

இந்த ஓவியங்கள் தற்போது தொல் பொருள்துறையின் சீரமைப்பில் உள்ளது.

இது சிவ புராணக் காட்சிகளின் சங்கமம், தென்புற சுவரில் த்ட்சிணாமூர்த்தி ஓங்கி வளர்ந்த விருட்சத்தின் கீழே தவநெறி கமழ சீடர்களுக்கு (சனாதன முனிவர்களுக்கு) ஞானமொழி அருளும் காட்சி . இயற்கையின் சாயல் நிரம்பிய சூழல். மேற்குபுறச் சுவரில் திருவிளையாடல் காட்சி, வலது கோடியில் சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானையில் கயிலாயம் செல்லும் போது, முன்னே சேரன்மான் நாயனார் குதிரை மீது அமர்ந்து சுந்தரமூர்த்தி நாயனாரை பார்த்தபடி செல்ல யானைக்கு முன் செல்லும் குதிரை, பயந்த படி வேகமாக நடக்கிறது. அவர்களை வரவேற்று மகிழும் வானவர் நடனமாடி,அதற்கேற்ப தாளமிசைத்து குதூகலிக்கும் கொண்டாட்டம். கீழ் புறம் உறவினர் கூடி மகிழும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணக் காட்சி, பளபளக்கும் ஆடைகளுடன் உறவினர்கள் விருந்துண்டு மகிழும் தடபுடல். இடையே யாரும் எதிபாராத வன்னம் அடிமை சாசன ஓலை ஏந்தி கிழவனாக ,தாழங்குடையுடன் வந்து திருமணத்தை தடுத்து நிறுத்திடும் சிவபெருமான். வாதம் செய்து சுந்தர மூர்த்தி நாயனாரை அழைத்து சென்று திருவெண்ணை நல்லூர் கோவிலில் மறையும் காட்சி.மேற்கு சுவரின் நடுவில் வெந்த நீறு பூசிய கோலத்துடன் நடராசனின் திரு நடனம். அரசிகள் சூழ மன்னர் மனமுருக வேண்டும் காட்சி. இடது புரம் சற்று கீழாக கருவூர் தேவரும் அவருக்கு பின் உயர்ந்த மகுடத்துடன் அடக்கத்துடன் சோழ பெரு வேந்தன் ராசராசன் . இதுதான் தமிழக ஓவிய வரலாற்றின் முதல் அரையுருவ ஓவியம் என கருதலாம்.

வடக்கு சுவரில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் போர் பெருமையை மறை முகமாக உணர்த்தும் "திரிபுராந்தகரின்" முப்புரம் எரிக்கும் போர் காட்சி. பூமியை தேராக ,வேதங்களை நான்கு குதிரைகளாக பூட்டி, மேருவை வில்லாக கொண்டு சிவந்த ரூபத்துடன் உருட்டும் விழிகளுடன், போர் கோபத்துடன் உஷ்ண மூச்சு பொங்கும் மூக்கு விரிந்திட,வெற்றி பெருக்குடன் புன்சிரிப்பு முருவலிட கம்பீரமாக கால்களை முன் பின் வைத்து வேகமாக ஓடும் தேரின் ஓட்டத்துக்கு ஏற்ற தோற்றத்துடன் சினம் கொண்ட சிவன். சிங்கத்தின் மீது துர்க்கையும், மூஞ்சூறு மீது வினாயகர், மயில் மீது முருகனும் புடை சூழ சிவன் திரிபுராந்தகராக போர் கோலம் பூண்டு செல்கிறான். சிவனின் வரவைக்கண்ட திரிபுர அசுரர்கள் துணிவுடன் எதிர் கொள்கிறார்கள். அவர்களின் காதல் மனைவிகள் கணவர்களை தடுக்கிறார்கள் , அதணையும் மீறி போருக்கு செல்லும் அவர்களின் அறியாமை கண்டு அழுது புலம்பும் ஓலக்காட்சி.
ஒரு போரின் சூழல் குறித்து ,பல போர்களின்வெற்றியையும் , அனுபவத்தை கொண்ட சோழ மன்னர்களின் நேரடி ஆலோசனைகளின் படி இவ்வோவியம் தீட்டப்பட்ட உணர்ச்சி களை இந்த போர்காட்சியில் காணலாம்.குறிப்பாக புகழ்பெற்ற உலக ஓவியங்களில் தஞ்சாவூர் சுதைஓவியத்தில் காணப்படும் போர்க் காட்சிபோல உள்ளீட்டு உணர்ச்சி ததும்பும் ஓவியத்தினை காண்பது அரிது.

இவை அனைத்தும் மிக சுருக்கமான பதிவுதான். முழுமையான ஓவியத் தொகுப்பு இன்னும் சுவை மிக்கது.

மிக அரிதான இந்த ஓவியத்தை மத்திய தொல்பொருள்துறை மிக கவணமாக சீரமைத்து வருவது பாரட்டுக்குரியது.எதிர் காலத்தில் நிச்சயமாக அனைவரும் இவ்வோவியத் தொகுப்பை காணும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்.
அன்பு நண்பர்களே ! இந்த பதிவை ஆர்வம் காரணமாக சுருக்கமாகவே எழுத உட்கார்ந்தேன், எந்த குறிப்பையும் கையில் வைத்திராமல். தெரிந்த அனுபவத்தை மட்டுமே கூறியுள்ளேன். சில தவறுகள் இருக்கலாம். பொருத்தருள வேண்டுகிறேன். - ஓவியர் ஆர்.ராஜராஜன்.ஓவியப் பேராசிரியர்  திரு.சீ.ரெங்கராஜன்.
எனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் 33 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியப் பேராசிரியராக பணியாற்றி 2010 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று கும்பகோணத்தில் வசிக்கும் திரு.ரெங்கராஜன்மாஸ்டர் அவர்களை பற்றிய சுருக்கமான பதிவு இங்கே.

போற்றுதலுக்குறிய பேராசான் திரு.சீ.ரெங்கராஜன் அவர்கள், கும்பகோணம் அரசினர் கவின் கலைக் கல்லூரியில் கடந்த 33 ஆண்டு களுக்கு மேலாக பணி புரிந்து பல நூறு மாணவர்களுக்கு ஓவியக்கலை பாடத்தை பாங்குற பயிற்றுவித்து வளமிக்க மாணவர்களை வளர்த்தெடுத்த ஆசான்.தங்கு தடையற்ற போதனைத்திறனும்,அறிவு சார்ந்து மாணவர்களிடம் அனுகும் விதமும் இவரின் மகத்தான பண்புக்குரியது,அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமைக்குரியது.
"மாஸ்டர்" என மாணவர்களால் அழைக்கப்படும் திரு.ரெங்கராஜன் அவர்கள் ஓவிய குரு ! ஞானம் கமழும் சுவீகரிப்பும்,அன்பு செரியும் கண்களும் , பொன் நிறமும் கொண்ட அழகிய தோற்றம் அவருடையது. அதிர்ந்து நடக்காத , அதட்டி பேசாத பண்பாளர். கோபிக்காமலே மாணவர்களை நெறிப் படுத்தும் இயல்பு ,இயற்கை அவருக்கு அளித்த வரம். இவரது கலை வாழ்வின் பயணம் தெளிந்த நீரோடையை போன்றது. என்றும் மாறாத தனித்தன்மையோடு இயங்கி வந்த இவரின் இயல்பு வளம் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்ற மாணவர்களால் மறக்க கூடியதல்ல.

தனது மாணவர்களின் மேன்மையையும் , வளர்ச்சியையும் மட்டுமே தனது இலக்காக கருதிய காரணத்தால் தன் விருப்பங்கள் மீது, இவர் கவனம் செலுத்தவே இல்லை. பரிசுத்தமான ஆசிரியத்தின் இலக்கனமாக மதிக்கப்படும் இவரது அக ,புற வாழ்வு கூட வேறு பாடற்றதாக உணரமுடிகிறது.

திரு.சீ. ரெங்கராஜன் எனும் அற்புத மனிதர் 1952 - ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனே யில் பிறந்தவர். தந்தையார் திரு. A.G. சீனிவாசன். தாயார் ஜென்பகலக்ஷ்மி. இவ்விருவரும் பூர்வீகமாக கும்பகோணத்தை சேர்ந்தவர்கள். திரு.A.G.சீனிவாசன் அவர்கள் இராணுவத்தில் ஓய்வூதிய கணக்கு அதிகாரியாக இருந்தார். இவர் புனே யில் தங்கி இருந்த போது திரு.ரெங்கராஜன் பிறந்தார். சில ஆண்டுகளில் இவர்கள் புனேயில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு மூன்று ஆண்டுகள் ஆரம்ப பள்ளியும்,அதன் பின் மும்பைக்கு இடமாற்றமும் ஆனதால் , முமபையில் 4 ,5 -ம் வகுப்புகளை பயின்றார். 1960 க்கு பிறகு இவர்களது குடும்பம் சென்னைக்கு வந்தது. 10 வயதுக்குள் மூன்று மாநிலங்களில் இருந்ததால், மராத்தி, இந்தி ,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளின் பரிட்சயத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.அப்போது நாடகத்துறையிலும், சினிமாவிலும் புகழ் பெற்ற திரு. T.K. பகவதியின் மகனும், நடிகர்.திரு.கமலஹாசனும் இவருடன் அந்த பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.

அப்போது ஓவியக்கலை மீதான ஒருவித ஈடுபாடு இவருள் வளர ஆரம்பித்தது. இது ஒருவகையில் இவரின் தந்தையார் திரு. சீனுவாசன் அவர்களிடமிருந்த ஓவியக் கலைக்கூட காரணமாக இருக்கலாம். அதன் பிறகு 7ஆம் வகுப்பு முதல் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள M.C.T. முத்தையா செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். பின் இவரது ஆசிரியர் திரு.சங்கர் என்பவரின் வழிகாட்டுதலில் ஓவியம் பயில சென்னை கலைத்தொழில் கல்லூரியில் சேர்ந்தார்.

அடக்கமும், நற்பண்புகளும் நிறைந்திருந்த திரு.ரெங்கராஜன் அவர்கள், திரு. ஏ.பி. சந்தானராஜ் , திரு.எல்.முனுசாமி, திரு.அந்தோனி தாஸ், திரு. அல்போன்ஸோ அருள்தாஸ், திரு.சண்முக சுந்தரம், திரு. எஸ் .கோபால் , திரு.ஆர்.பி. பாஸ்கரன் , திரு.கே.சீ.நாகராஜன் போன்ற ஆசிரிய பெருமக்களின் வழி காட்டுதல்களோடு வாஞ்சையோடு வளர்த்தெடுக்கப்பட்டார். இளம் பருவத்தில் பெற்றிருந்த மொழிவளம் ஓவியக் கலையில் தத்துவார்த்த தடத்தினூடே பயணிப்பதற்கு பேருதவியாக அமைந்தது. சென்னை கவின் கலைக் கல்லூரியின் நூலகம் மற்றும் ஆசிரிய பெருமக்களின் அனுபவ ஆற்றல் களம் திரு.ரெங்கராஜனின் ஓவிய பயிற்சிக்கு உலைக்களமாக விளங்கியது.

1977-78 ல் கும்பகோணம் அரசினர் கலைத் தொழில் கல்லூரிக்கு பயிற்றுனராக நியமிக்கப்பட்டார். தனது ஓவியப் பாதையை தீர்மானிக்க தொடங்கிய நெடிய பயணத்தில் தனக்கும் தன்னை பின் பற்றும் மாணவ சமூகத்துக்கும் உரிய தொடர்பின் எல்லை வேறுபாடுகளை கடந்தவாறு அமைத்துக்கொண்டார்.

இவரது ஓவியங்கள் அரூப நிலையில் ( ABSTRACT ) தொடங்கி படிப்படியாக பல பரிமாணங்களையும் கொண்டு இந்திய மரபு சார்ந்த ,பாரம்பரியச் செரிவு கொண்ட அடையாளங்களால் புனையப்பட்டது. அவை உருவ குறியீடுகளாய் மட்டுமே அல்லாமல் ஆழமான தத்துவக் கூறுகளை உள்ளடக்கிய பரிமாண நிலையை அடைந்தது.

பொதுவாக ஓவியக் கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் கட்டோவிய வளத்துடன் , உருவப்படங்களை ( Portraits ) தீட்டும் ஆற்றல் வாய்ந்தவர்களுக்கென்று மாணவகளிடம் ஒருவித மதிப்பு இருப்பதுண்டு. திரு.தனபால் மாஸ்டர், திரு. அந்தோனிதாஸ் மாஸ்டர், திரு. அல்போன்ஸோ மாஸ்டர் போன்றவர்களுக்கு பின் தரமான போர்ட்ரைட்களை மாணவர்களுக்கு வரைந்து காட்டி பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக திரு.ரெங்கராஜன் அவர்கள் திகழ்ந்தார். இவரின் தூரிகை தீண்டல்களில் அன்றைய கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாடல்களான அபிஷேகப் பத்தர், சிதம்பரம் மாடல் போண்றோர்களும் ,மாணவர்கலில் சிலரும் உயிரோட்ட மிக்க ஓவியங்களாக உரு பெற்றனர். ஓவியக்கலை தவிர யோகக்கலை, ஆன்மீகம், உளவியல் , தத்துவம் போண்றவற்றிலும் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த திரு.ரெங்கராஜன் அவர்களின் எந்த ஒரு அனுகு முறையும் அறிவு சார்ந்த பல பரிமாணங்களை கொண்டதாக இருந்தது. எந்த சூழலிலும் மாணவர்களின் ஐயங்களை தெளிவு படுத்தும பண்பு கொண்டவராக திகழ்ந்தார்.

" எனது 33 ஆண்டுகால ஆசிரியர் பணியில் நான் தினந்தோறும்.முதலாமாண்டு மாணவனாகவே கருதிவந்தேன். தினம்தோறும் கற்றுக் கொண்டு வருகிறேன். மாணவர்களுக்கு வழிகாட்டும் நேரங்களில், மாணவர்களிடமிருந்தும் கற்று வருகிறேன்"
என தனது குறுஞ்சரிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

" மாணவர்களிடமிருந்தும் கற்று வருகிறேன் " என்ற வரிகள் மூலம் தான் ஒரு மேதமை நிறைந்த குரு என்பதை பணிவாகவே உணர்த்துகின்றார். சிறந்த "குரு" ஓர் வரம் ,சிறந்த குருவை அடைவது அதை விட பெறும் பேறு என்பதை அவரிடம் பயின்ற மாணவர்கள் அறிவார்கள்.தனது இயல்பான வாழ்வியல் தடத்தில் பயணித்து வந்த அவரின் தனித்துவமிக்க ஆசிரியர் தொண்டு அளப்பரியது,கடந்த 30 ஆண்டுகளில் நாங்கள் அறிந்திருந்த திரு.சீ.ரெங்கராஜன் மாஸ்டரின் வளமிக்க புலமையும்,பண்டித்துவமும் எளிதன்று. தனது ஆசிரியர்கள் அனைவரிடமிருந்தும் வெவ்வேறான ஓவிய உத்திகள் ,பரிசோதனைகள்,நுட்பங்கள் போன்றவற்றை அறிந்திருந்தும்,தனது தனித்தன்மைகள் மூலம் மென்மை மிகு மேதமை ஸ்பரிசத்தை மாணவனின் உள்ளத்துக்குள் ஊடுருவி போதிக்கும் நுட்பத்தை யோகக்கலை அவருக்கு அளித்திருந்தது.

இன்று, திரு .ரெங்கராஜன் அவர்களின் மாணவர்களில் பலர் மத்திய, மாநில அரசு பணிகளிலும் ,தனியார் நிறுவனங்களிலும், வெளி நாடுகளிலும் நல்ல நிலையில் பணியாற்றி வருகின்றனர். சென்னை, கும்பகோணம்,புதுச்சேரி ஆகிய ஊர் களில் உள்ள ஓவியக் கல்லூரிகள், மற்றும் தமிழ்நாட்டின் இதர கல்லூரிகள், அரசு பள்லி களிலும் ஆசிரியர்களாக திகழ்ந்து வருகின்றனர்.அவரது கலைத்திறன் அவரது மாணவர்கள் வாயிலாக எதிர் காலத்தின் புதிய தேடலை நோக்கி பயணிப்பதை நாங்கள் உணர்கிறோம்.


கடந்த 31.13.2010 அன்று அவர் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெறும் தினத்தன்று அவரது முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவின் போது அவரது கலை வாழ்வு குறித்த இந்த சிறு தொகுப்பை நான் எழுதி அதை புதுச்சேரியில் அச்சிட்டு அன்றைய தினம் கும்பகோணத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பாக வெளியிட்டோம். அந்த பகுதியை அன்பு நண்பர்களுக்கும் ,கலை ஆர்வலர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன் - ஓவியர்.ஆர்.ராஜராஜன், புதுச்சேரி.

Monday, January 20, 2014

கடந்த 14.11.2013 அன்று தீட்டப்பட்ட SOFT PASTEL ஓவியம் இது. பேஸ்டல் ஓவியம் வெகு சுலபமாகவும் ,விரைவாகவும் தீட்டக்கூடியது. பேஸ்டலை பயன் படுத்துவதும், சாலை அல்லது தெருவை வரையும் போது கவனிக்க வேண்டிய VISUAL PERSPECTIVE காட்சி அமைப்பு பற்றிய செயல் முறைக்காக தீட்டிய போது எடுத்த படங்கள் இவை.


ஓவியர் ஆர்.ராஜராஜனின் டிரை பேஸ்டல் ஓவியம்

டிரை பேஸ்டல் ஓவியம் தீட்டும் போது ,வழக்கமான பென்சில் வரைவுகள் தீட்டி அதன் மீது வண்ணம் தீட்டுவதில்லை, காரணம் ஓவியம் நிறைவு பெற்றதும் வண்ணங்கள் கைகளில் ஒட்டும் தன்மை கொண்டது என்பதால் ஆரம்ப வரைவுகளை அழிக்க முடியாது. அதனால் ஓவிய கட்டமைப்பை மனத் தீர்வுகளை மூலம் தீர்மானித்து பிரவுன் அல்லது செங்காவி கட்டிகளைக்கொண்டு மென்மையான வரைவுகளை தீட்டி அதன் மீது பல வண்ண டிரை பேஸ்டல்கள் மூலம் ஓவியத்தை தீட்டிட வேண்டும்.

பட்டிணத்தார் ஓவியம்

"காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே "  என்ற ஒற்றை வரி பட்டிணத்தாரின் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது. இல்லம் மறந்து, சுற்றம் மறந்து, கெளபீனத்தோடு   பூம்புகாரின்  வீதிக்கு வந்த கோடீஸ்வர பெருவணிகர் அவர்.  எதுவுமற்ற மாய வாழ்வின் புறநிலையை புரிந்துகொண்டு வீடு பேறு என தமிழகம் மட்டுமல்லாது வட இந்தியா வரை யாத்திரை சென்று இறுதியில் தமிழகம் வந்தவர். இவரின் பாட்ல்கள் தனித்துவம் மிக்கவை. தமிழ் இலக்கிய தொகுப்பில் பட்டிணத்தடிகளின் பாடல்கள் என்றும், யாவருக்கும் பொருத்திப் பார்க்கும் தரம் செரிந்தவை.

புதுச்சேரியில் உள்ள சின்ன வீராம்பட்டிணம் பழமையான மீனவகிராமம். அங்குள்ள ஒரு வசதியான மீனவர் ஒருவரின் பயன்படுத்தபடாத பழங்கால வீடு சில வருடங்களுக்குமுன் தொடர் மழை காரணமாக ஓடு வேயப்பட்ட கூரை சரிந்து விழுந்தது. மழையில் நனைந்த சுவரில் ஓவியம் கானப்படுவதை அறிந்த உள்ளூர் ஓவியர் .திரு.திருநாவுக்கரசு (எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்) என்னிடம் தகவலை தெரிவித்தார். நான் எனது மாணவர்கள்,முருகன்.பிரபாகரன் ஆகியோரை அழைத்துக்கொண்டு சின்ன வீராம்பட்டிணம் சென்றேன். மழை ஈரத்தில் ஓவியம் ஓரளவு தெரிந்தது. வீட்டு உரிமையாளரின் உறவினரிடம் அனுமதி பெற்று ,சுவரின் சுன்னாம்பு படலத்தை கவணமாக நீக்கிணோம். அப்போது சுமார் 90 ஆண்டுகளுக்கு முந்தைய வைணவ ஓவிய தொகுப்பு காணப்பட்டது.அது பிந்தைய மராத்தியர் காலத்தின் சாயலை ஒட்டியதாக இனம் காண முடிந்தது.கடந்த 250 ஆண்டுகளாக பிரெஞ்சு காலணியாக திகழ்ந்த புதுச்சேரியில் எங்கும் காணப்படாத தமிழக கலைதொடர்ச்சியின் அடையாளமான பாரம்பரிய ஓவியதொகுப்பு புதிய பதிவாக உணரமுடிந்தது. 1750 களில் புதுச்சேரி முழுமையான பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த போது நகரம் இரண்டு தடவைக்கு மேல் முற்றாக மாற்றிஅமைக்கப்பட்டும்.புதுப்பிக்கப்பட்டும் இருந்த வரலாறு உண்டு.அதன்காரணமாக நகருக்கு வெளியில் உள்ள் ஒரு சில கோவில்கள் தவிர 300 வருடங்களுக்கு முந்தய எந்த பாரம்பரிய அடையாளங்களும் தமிழகத்தை போன்ற கட்டிடங்கள் ,சிற்பங்கள்,ஓவியங்கள் எதையும் காணமுடியாது என்ற கருத்தாக்கத்தில் உறைந்த வரலாற்றின் புதிய பக்கமாக இந்த ஓவிய தொகுப்பு கானப்பட்டது.17 ஆம் நூற்றாண்டுக்கு பின் மராத்தியர்கள் ஆட்சி தஞ்சையில் செல்வாக்கு குறைந்தபின் ஆங்கிலேயர் ஆட்சியால் ஆதரவை இழந்த ஓவியர்கள் வெளிமாநிலங்களுக்கு பிழைப்பு தேடி பரவினர், கிராமங்க்ளுக்கு சென்று வசதியானவர்களிடம் வாய்ப்பு பெற்று சில கோயில்களிலும், வீடுகளிலும் ஓவியங்களை தீட்டி வாழ்க்கையை நடத்தினர். இந்த ஓவியமும் அத்தகையதே.இந்த வைணவஓவிய தொகுப்பில் பாமா,ருக்மணியுடன் கிருஷ்ணன் காட்சிதருவதும்.சில வீரர்களும்,சிப்பாய்களும் வாள்,ஈட்டி, துப்பாக்கியுடன் காணப்படுகிறது, மிக குறைந்த தரமுடைய சுண்ணாம்பு காரை மீது மஞ்சள் ,சிகப்பு, பச்சை, காவி,போண்ற வண்ணங்களின் மீது கறுப்பு கோடுகளால் ஓவியம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.பரிமாணமற்ற நாட்டுபுற ஓவிய சாயலான இந்த ஓவியம் புதுச்சேரிக்கு அரிது. உடனடியாக பத்திரிக்கை ,தொலைக்காட்சி நன்பர்களுக்கு தகவல் கொடுத்தேன். மறுநாள் தினமனி,தினகரன். உள்ளூர் தொலக்காட்சி செய்திகளில் வெளியானது. அப்புறம் சிலமாதங்களில் அந்த சுவர்களும் இடிந்து விழுந்துவிட்டது.இந்த வரலாற்று ஆவணம் பதிவே இல்லாமல் போய்விட்டது.தமிழ்நாடு போல புதுச்சேரியில் தொல்பொருள் துறை இருப்பதாக தகவல் உள்ளது.கடந்த இருபது வருடமாக புதுச்சேரி தொல்பொருள் துறையை தேடுகிறேன்.சரியான விபரம் யாரும் சொல்ல மறுக்கிறார்கள்.வரலாற்று ஆர்வம் கொண்ட சில தனியார்களும், அரசு துறையை சேர்ந்தவர்களும் இதுபோண்ற சமாச்சாரங்களை சொந்த முயற்சியில் தேடியுள்ளனர் என்றாலும் அவர்களின் முயற்சிக்கும் ஆதரவில்லாமல் போனதால் வரலாற்று தொன்மை கொண்ட அரிக்கமேடு அகழ்வாய்வும் பெருமளவு நின்றுபோனது.புதுச்சேரியில் அதுபோல அருங்காட்சியகம் ஒன்று இருந்தது..........100 ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரியின் பாரம்பரிய ஓவியம்.
ஓவியர் ஆர்.ராஜராஜன் மற்றும் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் திருநாவுக்கரசு,முருகன்,பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்து வெளியிட்ட ஓவியம்.இடம் சின்னவீராம்பட்டிணம்.

Add caption
கடந்த சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் மூலம் திரு தமிழவேள் எழுதிய வரலாற்று நூலுக்கான அட்டை படம் வேண்டும் என கேட்டார்கள் .அவரின் புகைப்படம் சரியாக இல்லை என கூறி புத்தகம் ஒன்றில் அச்சாகி இருந்த (half tone ) படத்தை தந்தார்கள். ஒரிஜினல் படத்தில் ராணுவ உடையுடன் சிறு வயது இளைஞராக காணப்பட்டவரை கொஞ்சம் முதிர்ந்த தோற்றத்தில் அமைந்தால் நல்லது என்றார்கள்.மூன்று மாதிரி படங்கள் திருப்தியாக வரவில்லை. அவை அவரின் போர் குணத்துக்கு ஈடாக இல்லை என்பது எனக்கே தெரிந்தது.கடைசியாக தீட்டிய இந்த ஓவியத்தை எனது நெருங்கிய நண்பர்கள் பலரிடம் காண்பித்தேன்.நன்றாக வந்துள்ளது,எனினும் அவர்களிடம் கருத்து கேளுங்கள் என்றார்கள்.ஓவியத்தை வெகுநேரம் பார்த்த அவர்களிடம் ”திருப்தியாக வரவில்லை என்றால் இன்னும் முயற்சி செய்கிறேன்” என்று நான் கூறியபோது நாங்கள் எதிர்பார்த்த முகம் இதுவே ! திருப்தி என விடைபெற்றார்கள். சென்னையில் அந்தநூல் வெளியிடப்பட்டது. 50வருடங்களுக்கு பிறகு தியாகி .இமானுவேல் சேகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிவந்தது.


திரு. இமானுவேல்  சேகரன்

தமிழ் சமூகத்தின் தன்னிகரற்ற தொண்டர்,இன்று நாம் கெளரவத்தோடு நிமிர்ந்து நடப்பதற்காக, 90 வயதை தாண்டியும் குணிந்த படியே,பட்டி தொட்டியெல்லாம் சென்று தமிழ் இன விடுதலைக்காக களப்பணி ஆற்றியவர்.தலைமுறை மாறியதால் நாமே மீள்பார்வை செய்திட வேண்டியுள்ளது.சிலவருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக தீட்டிய ஓவியம் , மிக பெரிதாகவும், வித்தியாச மான வண்ணகலவைகளில் உருவான இவ்வோவியம் தற்போது இல்லை


தந்தை பெரியார்

தமிழ்நாட்டின் கடை கோடி சமூகம் என்றால் அது இருளர் தான்,தேசத்துக்கு இருபது லட்சம் கோடி பட்ஜட் என்றாலும் எந்தவித்திலும் இருளர்களின் வாழ்வில் முன்னேற்றமே ஏற்பட்டதில்லை.வாக்குரிமை மட்டும் எப்படியோ கிடைத்துவிட்டாலும் ,கல்வி,வாழ்விடவசதி,சுகாதாரம்,வேலை வாய்ப்பு,சாதி சான்றிதழ் போன்றவை கடிணம்தான், போதாகுறைக்கு கயவர்களின் கற்பழிப்பு கொடுமை வேறு.இவர்களின் இன்னல்களுக்கு கேட்க நாதி இல்லை என்ற நிலையில் தான் .திண்டிவனத்தை சேர்ந்த பேராசிரியர்.திரு கல்யாணி அவர்கள் பத்துவருடங்களுக்கு முன் “பழங்குடி இருளர் பாதுகாப்பு அமைப்பு “ ஒன்றை ஏற்படுத்தி இருளர்களின் கல்வி, மற்றும் வாழ்வாதார சிக்கல்களுக்கு உதவி வருகிறார்.அமைப்பை ஆரம்பித்தபோது, இருளர் ஓவியம் ஒன்றை வரைந்து தரும்படி கேட்ட போது இந்த கோட்டோவியத்தை வரைந்து கொடுத்தேன்,அவர்களின் துண்டு பிரசுரம்,சுவரொட்டி போண்றவைகளுக்கு இதை பயன்படுத்துகிறார்கள். இன்று பேராசிரியர் கல்யாணி அவர்களால் திண்டிவனத்தில் துவக்கப்பட்ட ஆரம்பப்பள்ளியில் பல இருளர் வீட்டு பிள்ளைகள் கல்வி பயின்று வருகின்றனர்.


 "இருளர் " கோட்டோவியம்.

கடந்த 2001 ஆண்டு ,சிங்கப்பூரில் உள்ள காரைக்குடி ஜெயலட்சுமி சுகுமார் அவர்களின் பிரமாண்டமான வீணை இசை நிகழ்ச்சி DBS ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. அதற்காக மேடை பின்னனியை அலங்கரிக்க ஓர் கலைமகள் ஓவியம் தேவை என கேட்டிருந்தார்கள். மிக குறுகிய கால அவகாசத்தில் அந்த பணியை செய்திட வேண்டியிருந்தது. இருபுறமும் தூண்களும்,சிற்பமும் இருப்பதாக திட்டமிட்டிருந்தேன். ஓவியத்தை முடித்ததும் அதை மடித்து விமானத்தில் அனுப்ப வேண்டும் என்பதால் ,பல முறை மடிக்க வேண்டிய போதிலும் ஓவியம் உடையாத தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், சுமார் 150 மீட்டர்கள் கொண்ட துணியை தைத்து அதில், கவணமாக ஓவியத்தை தொடங்கி னேன். எனது மாணவர்கள் மயிலாடுதுறை டி.ஆர்.செல்வம், திரு. ஆரோவில் ராமலிங்கம்,திரு.கன்னனூர் ராமலிங்கம்,திரு.மார்கண்டன்.திரு.சக்திவேல்.திரு.சுரேஷ். போன்றவர்கள் உதவிமட்டுமல்லாது, அரியாங்குப்பம். தோழர்.வீர.மோகன், தோழர்.ஆனந்த்.தோழர். கோ.சுகுமாரன் போன்றோர் பல்வேறு கள உதவிகளை செய்திருந்தார்கள். ஓவியம் முடிந்ததும் அதை சிங்கபூரில் உள்ள அரங்கத்தில் எந்த சிரமமும் இல்லாது அலங்கரிக்க ஏதுவான ஹூக்குகள், கம்பி வளையங்கள் போன்றவற்றை பொருத்தி உள்புறம் ஓவியத்தின் மடிப்புகள்ஒன்றோடு ஒன்று ஒட்டாதபடி "பட்டர் "காகிதங்களை நடுவில் வைத்து மடிக்க துவங்கினோம் எப்படி சிறியதாக மடித்த போதும் 16 மடிப்பாக வந்தது. ஈரம் படாத படி கச்சிதமாக பேக் செய்த பின் 6 அடி நீளமும்,5 அடி அகலமும், 2 அடி கணமுமாக பார்சல் தயாரானது.காரில் எடுத்துச் சென்று சென்னை யில் இருந்த அவர்கள் நண்பரிடம் கொடுத்துவிட்டு வந்தோம். ஏர்போர்ட்டில் ஸ்கேன் செய்தபோது பார்சலுக்குள்ளே இருந்த கம்பி வளையங்களால் எழுந்த சந்தேகத்தால் சற்று தாமதமாகி உரிய காலத்துக்குள் சிங்கப்பூர் சென்று அந்த வீணை இசை நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடை பெற்றது. இந்த ஓவியம் குறித்த செய்தி அப்போது ஆனந்த விகடன் இதழிலும் வெளிவந்தது. 12 வருடங்களுக்கு முன் நடந்த இந்த நிகழ்வை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
2001 ஆம் ஆண்டு வேலூரில் துவக்கப்பட்ட ரே மண்ட் ஷோ ரூம் கோட்டையை போல கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த பெண் கட்டிட வடிவமைப்பாளர் இதை வடிவமைத்திருந்தார், அக்கட்டிடத்தில் வைப்பதற்கு18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாதிரி பீரங்கி ஒன்று தேவைபட்டதால் ,அதற்கான கலந்தாலோசனைக்கென, என்னை சென்னைக்கு அழைத்திருந்தார்கள். பைபரில் செய்ய வேண்டும் என்றார்கள், மாதிரி பீரங்கியாக இருந்தாலும் அது நிஜத்தை போல இரும்பினால் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்றேன். அந்நிறுவனத்தின் எம்.டி யும் உடன் இருந்தார். எவ்வளவு எடை இருக்கும் என்றார்கள் சுமார் 600 கிலோ எடையில் இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்றேன். நல்லது நீங்கள் அதற்கான வரை படத்தினை முழுமையாக அனுப்புங்கள்.அதை மும்பையில் உள்ள எங்களின் தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிய பின் முடிவு செய்யலாம் என்றார்கள். இந்த வரைபடம் , அப்ரூவல் ஆகியது. அதனை முழுமையாக சுமார் 600 கிலோ எடையில் கச்சிதமாக செய்து புதுச்சேரியில் இருந்து அனுப்பிவைத்தேன்,சிறப்பாக அமைந்த இந்த மாடல் பீரஙகி வேலூர் ரே மண்ட் ஷோ ரூமில் காட்சி படுத்தப்பட்டது.

Sunday, January 19, 2014

பாரதி ! பராசக்தியின் உபாசகனே !
வ்றுமை கூட ஓர் வரம் என நிரூபித்த,
மேதை நீ ! நம்பிக்கை இழந்த இளைஞர்களுக்கு நிச்சயம் நீ ! கலங்கரை விளக்கம்.

ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

மகாகவி சுப்ரமணிய பாரதியார்
திருவலம்புரநாதர் திருக்கோவில் 
மேலப்பெரும்பள்ளம்

குளிர்ந்த நீரை தரும் கிணறு, வீடுகளிளும்,கோவில் போன்ற இடங்களிலும் மக்களின் தாகத்தினை தீர்க்கும் பெரும் பங்கு கிணற்றுக்கு உண்டு, மிக கச்சிதமான, அழகான கட்டுமானங்களால் அமைக்கப்படும் கிணறுகள் பல நூற்றாண்டுகள் வரை பயன் படுவதுண்டு.எத்தனை கோடை வெயில் வாட்டினாலும், சிலீரென்ற கிணற்று நீரில் குளிப்பது ஓர் சுகம். சில கிணறுகளில் தண்ணீர் குளிர்ச்சியாக மட்டுமல்லாது சுத்தமான குடி நீராகவும் மக்களின் தேவையை பூர்த்தி செய்தன. அப்படி பட்ட அரிதான கிணறுகளில் ஒன்று இது. இடம் நாகை மாவட்டம் பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலையூர் கடைஅனை ( சட்ரேஸ் ) . இதற்கு தென்புரம்செல்லும் சாலைவழியே சென்றால் அங்கு அமைந்துள்ள திருவலம்புரநாதர் திருக்கோவில். சமீபத்தில் இந்த கோவிலுக்கு சென்றுவந்தேன். இந்த கிணற்றருகே வெகு நேரம் அமர்ந்து இருந்தேன்.

அமைதியும்,தனிமையும் இந்த கோவிலின் தனித்துவம்.சமயகுரவர்களின் பாடல்களால் போற்றப்பட்ட 1400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது , அனேகமாக இது "மாடக்கோவில்" வகையை சார்ந்தது என கருதுகிறேன். நெடிந்து உயர்ந்துள்ள ஆண்பனை மரம் தலவிருட்சம்.

தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள மிக பழமையான கோவிலான இதை இருந்து கவணிப்பதற்கு உரிய அதிகாரி பற்றாக்குறை தெரிகிறது. இரண்டு பணியாளர்கள் இருந்து வருபவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இந்த வலம்புரநாதர் கோவில் மட்டுமல்லாது வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு மூன்று கோவில்களையும் ஒரே நிர்வாக அதிகாரியால் நிர்வகிக்கப் படுகிறது. பூசைகள் நடப்பதாக தெரிவிக்கிறார்கள். கருவறைக்கு வெளியில் உள்ள சுற்று சுவர்களில் மிக அழகும் ,நுணுக்கமும் மிக்க கருங்கல் புடைப்பு சிற்பங்கள் மனதை வருடுகிண்றன, கோவிலின் வரலாற்று தரவுகளை தாங்கிய அற்புதமான கல்வெட்டுக்கள் இக்கோவிலின் உயர்ந்த தரத்திற்கு அடையாளம். இக்கோவிலில் சில இடங்களில் பல்லவர்களின் சிற்ப தொடர்ச்சியும், பிற்கால சோழர்களின் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றது. பட்டிணத்தார், அப்பர்,திருஞானசம்பந்தர்,சுந்தரமூர்த்தி நாயனார் போன்றவர்கள் இந்த கோவிலுக்கு வந்து சென்றுள்ளது இதன் சிறப்பு.
                                                                  கலை           ஓவியர்.ஆர்.ராஜராஜன் 
                                                                                                                                                   “கலை   என்ற சொல்    “கல்”  என்றும்  “கற்றல்”  என்கிற  செயலாக்கத்தின்  பொருள் கொண்டது.  பொதுவாக  கலை  என்ற  பொருளுக்கு   பல்வேறு  விதமான  அர்த்தங்கள் கூறப்பட்டுள்ளது.    கலை   என்பது செயல் வடிவம் என்றபோதும்  , அதன் உள்ளீட்டான கருத்துக்கு பல்வேறு விதமான பொருள்களை கூறவல்லது.   அழகியல்  என்ற  நோக்கில் , கலை என்பது  தத்துவ  சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது.   முதலாவதாக கலை என்பது ஓர் செயல் , அல்லது செய்பண்டம். அது உருவாக்கப்படுவது,  அதில் பொதிந்துள்ள புறவய பன்பு மனிதனை கவர்ந்து ஈர்க்கிறது.   அவனது மனதினை பரவசப்படுத்துகிண்றது.      அவனுக்கு இனம் புரியாத  சுகானுபவத்தினை தருகிறது. முதலில் ரசனை குறித்த ஈடுபாடு  மட்டுமல்லாது  மனிதனின் வாழ்வோடு கூடிய அங்கமாக கலை திகழ்கிறது
            ஆதி மனிதன் தனது தொழிலான வேட்டைக்கு பிறகு அடுத்த பொழுது போக்கு அம்சமாகவும் ஆதி கலைகளான  ஓவியம், இசை, நாட்டியம் போன்ற வற்றில் தன்னை ஈடு படுத்திக்  கொன்டிருந்தான.  இத்தகைய கலை முயற்சிகள் யாவும் மனித நாகரீகத்தோடு படிபடியாக மேன்மை  அடைந்தன . கலைகளின்  தொடக்கம்  அது  மனித  மன எழுச்சியின் தன்மைக்கு ஏற்ப தத்தம்  அடையாளங்களுடன்  பரிணாமம்  அடைந்தது. மனிதன் உணவை சமைத்து உண்ண தலைப்பட்ட போது அவன் அறிவுசார்ந்த சமூகத்தினை நிறுவத் துவங்கினான்.  நாகரீகம் என்பது ஒருவரிடமிருந்து ஒருவருக்கு இடம் பெயர்வதைப் போல கலை சார்ந்த  செயல்கள் அனைத்தும் மனித சமூகத்தில் உரிய தளங்களில் பரவி தழைக்க நாகரீகமும், இயற்கைச்சூழலும் மனிதனுக்கு போதிய ஆதரவை வழங்கின.
            குகைகளில் தீட்டப்படும் ஓவியம் என்பது வாழ்வின் ஓர் அங்கமாக தொடர்பு சாதனம் என்பது  மட்டுமல்லாது, அது மனித வாழ்வின் அருள் தரும் சக்தியின் குறியீடாகவும் நம்பினார்கள், குறிப்பாக ,சூரியன்,சந்திரன்,இடி,மழை போன்ற இயற்கையின் எல்லாவற்றையும் தமது வாழ்வின் சுக துக்கங்களோடு தொடர்புடையதாக நம்பி ஓவியத்தின் மீது அளப்பறிய ஈடுபாட்டினை கொண்டிருந்தனர். இத்தகைய தவிர்வற்ற நிலையில் ஓவியமும் மட்டுமல்லாது இதர கலைகளான நாட்டியம் ,இசை  போண்ற நுகர்தரவுகள் மனித மனங்களில் தேங்கியுள்ள உணர்ச்சிகளுக்கு ஏற்ப பல்லாயிரம் ஆண்டுகளாக  கலை என்ற செயலாக்கம் மனித நாகரீகத்தோடு வளர்ந்து,செழித்து, நவீன மாற்றங்களை அடைந்துள்ளது.