சித்தன்ன வாசல் கள ஆய்வு -ஓவியர் ராஜராஜன் மற்றும் மாணவர்கள் சித்தன்ன வாசல் ஓவிய வளாகம் |
சித்தன்னவாசல் ஓவியங்கள் தமிழகத்தின் மிக அரிதான சுதை ஓவிய ( Fresco painting ) வகையை சார்ந்தது.இத்தகைய சுதை ஓவியங்கள் தமிழகத்தில் தஞ்சை பெரியகோவிலின் ”தட்சினமேரு” எனப்படும் ஸ்ரீவிமானத்தின் கருவரை உட்புறத்திலும், விழுப்புரம் மாவட்டம் பனைமலையில் அமைந்துள்ள கோவிலின் சில பகுதிகளில் காணப்படுகின்றது.சித்தன்னவாசல் ஓவியங்களை காண்பது ஓர் அற்புதமான அனுபவம்.சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னதாக தீட்டப்பட்ட இவ்வோவியங்கள், பல்லவர்காலத்தில் தொடங்கப்பட்டு பாண்டியர்காலம் வரை புணரமைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.குடைவரை கோவிலின் உட்பகுதியில் தீட்டப்பட்டுள்ள அழகுததும்பும் ஓவியங்கள் சமண சமயம் சார்ந்தவை.இயற்கைச்சுவை மிகுந்த சமண ஓவியத்தை ஓவிய ஆர்வலர்களும், ஓவியம் பயிலும் மாணவர்களும் , ஓவியர்களும் அவசியம் காணவேண்டிய கலைக் கருவூலம். 1980 முதல் நான் எனது மாணவப்பருவத்திலிருந்தே சித்தன்னவாசல் ஓவியங்களை கண்டுவந்திருக்கிறேன்.கடந்த 20 வருடங்களில் பலதடவை மாணவர்களை கள பயிற்ச்சிக்காக அழைத்து சென்றுள்ளேன், ஒவ்வொரு முறை போகும் போதும் முதல்முறை காணும் பரவசத்தை உணர்வேன்.இன்று நமக்கு இருக்கும் வசதிகளான காகிதம், மின்சாரம், வரைபொருட்கள்,புகைப்படம் போண்ற எதுவும் இல்லாத காலத்தில் சமண ஓவியப்புலவர்கள் தமது கற்பணை வாயிலாக , இருட்டறையில் தீட்டிய ஓவிய தொழில் நுட்பம் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் எங்களது மாணவர்களை அழைத்து சென்று ஓவியங்களை காட்டுவோம்,.குறிப்பாக சுதை ஓவியத்தின் தனித்தன்மை, ஓவிய கட்டமைப்பு, தொழில் நுட்பம், ஓவியத்தின் வெளிபாடுகள். காட்சியில் காணப்படும் அழகுணர்ச்சிகள் போண்றவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள கூடியதாக அந்த கள ஆய்வு பயிற்சிகள் தொடருகின்றன..கடந்த ஆண்டு நானும், எங்கள் கல்லூரியின் கலை வரலாற்று பேராசிரியர். முனைவர்.திரு.பி.வி.பிரபாகரனும் சென்றோம், இந்த ஆண்டு நானும் ,பேராசிரியர்.திரு.E.மாரியப்பன் ,மற்றும்,திரு.மார்கண்டன் ஆசிரியர் அவர்களுடன் சென்றோம்.
இந்த ஆண்டு ஓவியங்களை சரிவர கண்டு ரசிக்க முடியவில்லை, காரணம் இந்த ஆண்டு ஓவிய பாது காப்பு பகுதியில் இருந்த அரசு ஊழியர் எங்களை டென்ஷன் ஆக்கிவிட்டார். சித்தன்ன வாசல் பகுதிக்கு வருவதற்கு ஒரு கட்டணம் மட்டுமல்லாது , ஓவியங்களை காண்பதற்கு தனி கட்டணம் வாங்க வேண்டும் என்பதோடு ,ஓவியங்களை விளக்கி கூற தனியாகஅவருக்கு பணம் தரவேண்டும் என்றதும் மாணவர்கள் இந்த ஓவியத்தை காண்பதற்காக தான் வருகிறோம் இன்னொரு கட்டனம் செலுத்த வேண்டுமா என ய்தார்த்தமாக கேட்டதும் ஆமாம் வாங்க வேண்டும், எனக்கும் தனியாக கட்டணம் தராவிட்டால் வெளியே நின்று பாருங்கள் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியதும் எனக்கு கோபம் வந்தது , என்ன வியாபராமா பேசுகிறீர்கள் ? அரசு ஊழியர்தானே நீங்கள் ,டிக்கட்டை மட்டும் கொடுங்கள் ஓவியத்தை நான் விளக்கி மாணவர்களிடம் கூறிக்கொள்கிறேன், என்று கூறி ஓவியங்களை நான் விளக்க துவங்கியதும் அந்த ஊழியர் தானாக வந்து சேர்ந்து கொண்டார்.தனி கட்டணம் மட்டுமல்லாது எதோ கொஞ்சம் மாணவர்களிடம் தனியாக வாங்கிய பின்தான் அவர் ஓவியங்களை காண்பதற்கு உதவினார். சுற்றுலா பகுதிகளை என்னதான் முன்னேற்றினாலும் இதுபோன்ற சூழல்களை களைய தமிழக அரசு கவணம் செலுத்த வேண்டும்.