Friday, February 14, 2014

சித்தன்ன வாசல் கள ஆய்வு -ஓவியர் ராஜராஜன் மற்றும் மாணவர்கள்


சித்தன்ன வாசல் ஓவிய வளாகம்
கடந்த 4.2.2014 அன்று எங்களது பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்ன வாசல் ஓவியங்கள் குறித்த கள ஆய்வுக்காக சென்றிருந்தோம். தற்போது தமிழக அரசின் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடை பெற்று இருந்தன. சிறப்பாக பராமரிக்க உரிய ஏற்பாடுகளை செய்திருந்தது பாராட்டுக்குறியது.

சித்தன்னவாசல் ஓவியங்கள் தமிழகத்தின் மிக அரிதான சுதை ஓவிய ( Fresco painting ) வகையை சார்ந்தது.இத்தகைய சுதை ஓவியங்கள் தமிழகத்தில் தஞ்சை பெரியகோவிலின் ”தட்சினமேரு” எனப்படும் ஸ்ரீவிமானத்தின் கருவரை உட்புறத்திலும், விழுப்புரம் மாவட்டம் பனைமலையில் அமைந்துள்ள கோவிலின் சில பகுதிகளில் காணப்படுகின்றது.சித்தன்னவாசல் ஓவியங்களை காண்பது ஓர் அற்புதமான அனுபவம்.சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னதாக தீட்டப்பட்ட இவ்வோவியங்கள், பல்லவர்காலத்தில் தொடங்கப்பட்டு பாண்டியர்காலம் வரை புணரமைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.குடைவரை கோவிலின் உட்பகுதியில் தீட்டப்பட்டுள்ள அழகுததும்பும் ஓவியங்கள் சமண சமயம் சார்ந்தவை.இயற்கைச்சுவை மிகுந்த சமண ஓவியத்தை ஓவிய ஆர்வலர்களும், ஓவியம் பயிலும் மாணவர்களும் , ஓவியர்களும் அவசியம் காணவேண்டிய கலைக் கருவூலம். 1980 முதல் நான் எனது மாணவப்பருவத்திலிருந்தே சித்தன்னவாசல் ஓவியங்களை கண்டுவந்திருக்கிறேன்.கடந்த 20 வருடங்களில் பலதடவை மாணவர்களை கள பயிற்ச்சிக்காக அழைத்து சென்றுள்ளேன், ஒவ்வொரு முறை போகும் போதும் முதல்முறை காணும் பரவசத்தை உணர்வேன்.இன்று நமக்கு இருக்கும் வசதிகளான காகிதம், மின்சாரம், வரைபொருட்கள்,புகைப்படம் போண்ற எதுவும் இல்லாத காலத்தில் சமண ஓவியப்புலவர்கள் தமது கற்பணை வாயிலாக , இருட்டறையில் தீட்டிய ஓவிய தொழில் நுட்பம் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் எங்களது மாணவர்களை அழைத்து சென்று ஓவியங்களை காட்டுவோம்,.குறிப்பாக சுதை ஓவியத்தின் தனித்தன்மை, ஓவிய கட்டமைப்பு, தொழில் நுட்பம், ஓவியத்தின் வெளிபாடுகள். காட்சியில் காணப்படும் அழகுணர்ச்சிகள் போண்றவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள கூடியதாக அந்த கள ஆய்வு பயிற்சிகள் தொடருகின்றன..கடந்த ஆண்டு  நானும், எங்கள் கல்லூரியின் கலை வரலாற்று பேராசிரியர். முனைவர்.திரு.பி.வி.பிரபாகரனும் சென்றோம், இந்த ஆண்டு நானும் ,பேராசிரியர்.திரு.E.மாரியப்பன் ,மற்றும்,திரு.மார்கண்டன் ஆசிரியர் அவர்களுடன்  சென்றோம்.
இந்த ஆண்டு ஓவியங்களை சரிவர கண்டு ரசிக்க முடியவில்லை, காரணம் இந்த ஆண்டு ஓவிய பாது காப்பு பகுதியில் இருந்த அரசு ஊழியர் எங்களை டென்ஷன் ஆக்கிவிட்டார்.   சித்தன்ன வாசல் பகுதிக்கு வருவதற்கு ஒரு கட்டணம் மட்டுமல்லாது , ஓவியங்களை காண்பதற்கு தனி கட்டணம் வாங்க வேண்டும் என்பதோடு ,ஓவியங்களை விளக்கி கூற தனியாகஅவருக்கு பணம் தரவேண்டும் என்றதும்  மாணவர்கள் இந்த ஓவியத்தை காண்பதற்காக தான் வருகிறோம் இன்னொரு கட்டனம் செலுத்த வேண்டுமா என ய்தார்த்தமாக  கேட்டதும் ஆமாம் வாங்க வேண்டும், எனக்கும் தனியாக கட்டணம் தராவிட்டால் வெளியே நின்று பாருங்கள் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியதும் எனக்கு கோபம் வந்தது , என்ன வியாபராமா பேசுகிறீர்கள் ? அரசு ஊழியர்தானே நீங்கள் ,டிக்கட்டை மட்டும் கொடுங்கள் ஓவியத்தை நான் விளக்கி மாணவர்களிடம் கூறிக்கொள்கிறேன், என்று கூறி ஓவியங்களை நான் விளக்க துவங்கியதும் அந்த ஊழியர் தானாக வந்து சேர்ந்து கொண்டார்.தனி கட்டணம் மட்டுமல்லாது எதோ கொஞ்சம் மாணவர்களிடம் தனியாக வாங்கிய பின்தான் அவர் ஓவியங்களை காண்பதற்கு உதவினார். சுற்றுலா பகுதிகளை என்னதான் முன்னேற்றினாலும் இதுபோன்ற சூழல்களை களைய தமிழக அரசு கவணம் செலுத்த வேண்டும். 




Saturday, February 1, 2014


தந்தை பெரியார் நீர்வண்ண ஓவியம்.
ஓவியர் ஆர்.ராஜராஜன்


தந்தை பெரியாரின் நீர்வண்ண ஓவியம். புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நாள்காட்டிக்காக தீட்டப்பட்ட ஓவியம். இன்று பரவலாக பல தளங்களில் பயன் படுத்தப்படும் இந்த ஓவியம் மிக அவசரமாக தீட்டப்பட்ட எனது ஓவியங்களில் ஒன்று. மிக அழகாக அய்யாவின் ஓவியம் வந்திருப்பதை அறிந்து விடுதலை பதிப்பகத்திலிருந்து பாராட்டுதல்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். ஓவியத்தின் மீதான விருப்பத்தினால் தந்தை பெரியாரின் 134 ஆவது பிறந்த நாள் மலரில் முகப்பு அட்டைக்காக பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள்.மிகுந்த மகிழ்ச்சியோடு அருமை நண்பர் .திரு.வீரமோகன் ( தலைவர்.த.பெ.தி.க. புதுச்சேரி ) அவர்களிடம் தெரிவித்தேன். , உடன் அனுப்பி வையுங்கள் .உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. அய்யாவின் ஓவியம் பிறந்த நாள் மலரில் இடம் பெறுவது உங்களுக்கு பெருமை என்று கூறினார். அந்த மலர் மிக அழகாக வந்திருந்தது. இதன் ஒரிஜினல் ஓவியம் என்னிடமே உள்ளது ,அதை தற்போது எனது வகுப்பறையில் மாணவர்களின் பார்வைக்காக வைத்துள்ளேன். இதனை தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட பெரியார் அவர்களின் ஓவியங்களை தீட்டினேன் இருந்தாலும் இந்த ஓவியத்தின் வசீகரம் எனது மற்ற ஓவியங்களுக்கு அமையவில்லை. அருமை நண்பர்களுக்கு இந்த தகவலை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.



தந்தை பெரியார் நீர்வண்ண ஓவியம்

Friday, January 31, 2014


பூம்புகார் துறைமுகம் -ஓவியம்
ஓவியர்.ஆர்.ராஜராஜன்


"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலில் வந்த கருங்கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணக்கடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும் "

என விளித்துக்கூறப்பட்ட புகாரின் துறைமுகம் பல தேசத்து வணிகர்களின் உறைவிடமாக திகழ்ந்ததாக பட்டினப்பாலை,சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்கள் காலககன்ணாடியாக உருவகப்படுத்துகின்றன.இயற்கையாலும், அரசியல் மாற்றங்களாலும், நமது அறியாமையாலும்
தமிழகம் இழந்த பெருமையை மீண்டும் பெற்றிட வரலாறுகளை மீண்டும் வாசிப்போம். எதிர்கால தமிழகம் குறித்து யோசிப்போம்.நாமும் உயர்ந்து
உலகையும் உயர்த்துவோம்


.
சங்ககால பூம்புகார் துறைமுகம் -கற்பனை ஓவியம்

Thursday, January 30, 2014

தந்தை பெரியார் கொலாஜ் ஓவியம்.
ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

பிறவாய் பேரறிவே,
பிறந்திங்கு தருவாய்




பகுத்தறிவு பாலமுதை.
வகுப்பாய் வாய்மையெனும்
வாழ்வு நெறியை.

சுதந்திர சூட்சமத்தில்
ஆர்ப்பரித்த அரைகூவல்களை
மறக்க துவங்கினோம்.
அவலங்கள் கூட
மாலை மணம் வீசிட
மகுடம் சூட்டி
வீதியுலா செல்கின்றன,

தீயாய் பெருகும்
தீங்ககற்ற
திரும்பிவந்து
காப்பாய் ,காலத்தின்
காயங்கள் மறைந்திட.


கொலாஜ் ஓவியம்- ஆண்டு ,2011.

Tuesday, January 28, 2014

ஆண்டாள் 

ஓவியர்.ராஜராஜன்.


ஆண்டாள் 

வாரண மாயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரண நாட்டக் கனாக்கண்டேன் தோழீ ! நான்.........

மத்தளங் கொட்ட வரிச்சங்க நின்றூத
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ ! நான்......

குங்குமம் மப்பி குளிர்சாந்த மட்டித்து,
மங்கல வீதி வலஞ்செய்து மணநீர்
அங்கவனோடு முடன்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ ! நான்......... 

என அப்பேதை புலம்புகிறாள், 
கனவு மெய்படுமா?
காலம் கனியுமா? அவனை அடைதல் நிஜம்தானா?
..அவனின் ஸ்பரிசம் குறித்த அளவற்ற ஐயம் வாட்டி எடுக்கிறது.தோழிகளிடம் கேட்க முடியாத சங்கடமாக சந்தேகங்கள் பல,
எதுவும் அரியாத அவளுக்கு குறைந்த பட்சம் அன்பு குழைந்த முத்தம் எத்தகையது என்றாவது அறிய ஆவல்தான், ஆனால் யாரிடம் கேட்பது, வெட்கம் வேறு !துணிவை தடுக்கிறது.

பொறிதட்டியதைப்போல வந்தது புதிய சிந்தனை ,ஆம் வெண்சங்கு .அதுதானே அவனின் இதழ்பதித்து அன்டசராசரங்களுக்கு திருத்தகவல் அருளும் திருப்பொருள். சங்கடம் பார்காது சங்கிடம் கேட்டால் அது யாரிடமும் சொல்லாது அன்றோ !அதனிடம் கேட்டால் எம்பெருமானின் இதழ்சுவை பற்றி அறியலாமே என்றவளாய்,கேட்க துணிந்தாள்.

கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ ?
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

எத்தகைய உளவியல் உன்னதம், தமிழ் மொழியின் இனிமை மாறாத தீஞ்சுவை விருந்தாக ஆழ்வார்களின் பாசுரங்கள்.
எனது நண்பர் திரு.செல்வமணியை கடந்த வாரம் சந்தித்தபோது அவரது கையில் நாலாயிர ப்ரபந்தம்.நாச்சியார் திருமொழி பற்றி நிறைய பேசினோம். புதுச்சேரி வந்ததும் முதல் வேலையாக என்னிடம் இருந்த நாலாயிர ப்ரபந்த புத்தகத்தின் சில பகுதிகளை பார்த்தேன் தமிழும் ,இனிமையும்,பொருட்சுவையும்,கற்பனையும் கலந்த ஒன்றாக பாசுரங்கள், அது எனக்கு தந்த மகிழ்ச்சிதான் இந்த கோட்டோவியம். என் ஆர்வம் பக்திக்குறியதல்ல. அழகு தமிழின் விழுமியம் சார்ந்தது. 

இவ்வனுபவத்தை இந்த கோட்டோவியத்துடன் அன்பு நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்.

Monday, January 27, 2014



"நாட்டிய பேராசான்"
காட்டுமன்னார் கோவில் முத்துக்குமரப்பிள்ளை.

ஓவியர்.ஆர்.ராஜராஜன்.


நாட்டிய பேராசான்  காட்டுமன்னார்கோவில் .முத்துக் குமரப்பிள்ளை


தற்கால நாட்டிய மரபின் மறுமலர்ச்சிக் கால மாமேதை. பரதக்கலை நட்டுவாங்கக் கலையின் தனிப்பெரும் ஆளுமை. சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார் கோயில் எனும் கிராமத்தில் 1874 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரு.முத்துக்குமரப் பிள்ளை அவர்கள் பிறந்தார்.இவரின் அக்காள் கண்ணம்மாள் இவரை விட மூன்று வயது மூத்தவர்.உள்ளூர் சிவன் கோவிலில் இறைப்பணி ஆற்றினார்.
காலம் காலமாக சதிர்கலையை சார்ந்திருந்த அந்த குடும்பம் காலச் சூழலுக்கேற்ப பரதக் கலையை பயிற்றுவிக்கும் சமூக மாற்றத்துக்கு நகர்ந்தது. தமது 19 ஆம் வயதிலேயே திரு. முத்துக்குமரப்பிள்ளை நாட்டியவகுப்பை குருக்குலமாக தொடங்கினார். அத்துடன் இசைவகுப்பையும் கவனித்தார்.தமிழ்,தெலுங்கு,சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அவரின் போதனைகளுக்கு பேருதவி புரிந்தன.

இவரிடம் நாட்டியம் பயின்ற பலர் காட்டுமன்னார் கோயில் நாட்டியமரபை உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று பிரகாசித்ததனர். எம்.கே.சரோஜா ( இவர் முத்துக்குமரப்பிள்ளையின் மகள்) மிருனாளினி சாராபாய்,முத்துசாமி பிள்ளை, கமலா, ராம்கோபால், நள நாஜன், ஜனக் கென்ட்ரி, போன்றவர்கள் குறிப்பிடதக்கவர்கள்.
கிராம வாழ்க்கையும், நகரவாழ்க்கையும் வேறுபாடின்றி பிள்ளையவர்களின் கலைத்திறனுக்குஏற்ப இயைந்து சென்றன. இசையிலும், நாட்டியத்திலும் திளைத்திருந்த மேதமையை செம்மையாக்கல் மூலமாக அறிவு வயமான எழுத்துவடிவமாக மாற்றிய முயற்சி அவருக்கு சாத்தியமாகியது. ஆம், 1921 ஆம் ஆண்டு "ஸங்கீத ஸ்வரக் ஞான போதினி" எனும் இசைநூலை எழுதிமுடித்தார்.அது 29 அத்தியாயங்களை உள்ளடக்கியது. அந்நூலை சென்னை திருவல்லிக்கேணி ரூபர்ட் அண்ட் கம்பெனியால் அச்சிடப்பட்டு, 2 ரூபாய் விலைக்கு வெளியிடப்பட்டது. 10.5.1943 ஆம் ஆண்டு இவரின் ஆறு மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை மாயவரம் பெரியகோவில் அவயம்பாள் சன்னதியில் மிக விமரிசையாக நோட்டிஸ் அடித்து முக்கியஸ்தர்களை அழைத்து நடத்தினார்.

கலை சிந்தனையால் மட்டுமே இவரது மனம் வியாபித்து இருந்ததால் பணம் மீதான கவணம் இல்லை. முதுமை, மேதமை இரண்டும் மனிதனை முடக்கிவிடும்.
தமது அளப்பறிய போதனைகளின் வாயிலாக பல மேதைகளை உருவாக்கிய இந்த மாமேதை வாழ்வின் இறுதிகாலத்தில் யாரிடமும் எந்த உதவியையும் பெற விரும்பவில்லை. 1959 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய சங்கீத நாடக அக்கடமி சேர்மனுக்கு ஓர் கடிதம் எழுதினார். பல நாட்டிய மாணவர்களை உருவாகினேன், எனது நட்டுவாங்க மரபு மிகுந்த மதிப்பு மிக்கது. வேறு யாரிடமும் உதவி பெற விரும்பாத நிலையை குறிப்பிட்டு , எனக்கு மாதம் ரூ.100/ மட்டும் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தால் எஞ்சிய காலத்துக்கு பயனாக அமையும், எனவே உதவி செய்யுங்கள் என கோரி இருந்தார். அவர் தனது 86 ஆம் வயதில் இயற்கை எய்தும் வரை அக்கடமியில் இருந்து எந்த பதிலும் வரவே இல்லை. இருப்பினும் அவர் நம்மோடு வாழ்ந்துகொன்டே இருக்கிறார் பதிவுகளாக.

அன்பு நண்பர்களே, எத்தனை மேதமைகள் , அபார திறமைகள் ,இருந்தாலும் நமது சமூக கட்டமைப்பு என்பது இதுதான்.

இவரை பற்றிய விரிவான கட்டுரை " ஸ்ருதி " செப்டம்பர் 1993 இதழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.நான் சில தகவல்களை மட்டும் மிக சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன்.

Sunday, January 26, 2014


2006 ஆம் ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் காலண்டர் அச்சிடும் போது, அரசு திட்டங்களை மக்கள் கவணத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், பிரத்தியேகமாக 12 ஓவியங்களை தீட்டி அளித்தேன். குறிப்பாக புதுச்சேரியில் அசையா சொத்துக்களான மனைகள் ,நிலங்களை வாங்கும் போது அதை பெண்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் அதற்கு பத்திர செலவு பாதி கட்டணமே போதும் .இது மிக முன்னோடியான திட்டம், இன்றும் இங்கே புதுச்சேரியில் நடை முறையில் உள்ளது. இது போன்ற திட்டங்களை 12 மாதங்களுக்கும் வரைந்து கொடுத்தேன் . ஒவ்வொரு ஓவியமும், தீட்டப்பட்டு முடியும் தறுவாயில் அது உடணடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்றும் தலைமைச்செயலர் போன்ற அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் கிடைத்ததும்,ஓவியங்கள் முழுமை அடையும். பல ஓவியங்கள் சிறப்பாக வந்தன.2005 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இந்த பணி என்னிடம் வழங்கப்பட்டது, ஐந்து மாதங்களுக்கான ஓவியங்கள் நிறைவடைந்த சமயம் எனது மகள் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டாள், 5 மணி நேரத்தில் சென்னை கொண்டு செல்ல வேண்டும் என பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியதால் சென்னை சென்று கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தோம், காலண்டர் பணியை இடையில் தடைபட்டதை அறிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்கள், செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்துள்ளார். ஓவியர் ராஜராஜனின் மகள் அவசர சிகிச்சைக்காக சென்னையில் சேர்க்கப்பட்டுள்ளார்,அதனால் தாமதம் ஆகின்றது என்றனர். சரி வேறு யாரிடமாவது கொடுத்து பணிகளை முடிக்கலாமே என்றாராம், உங்களின் கவணத்துக்கு வரும் முன்னரே சில இடங்களில் கொடுத்தோம் ஐயா, ஆனால் ஓவியங்கள் முழுமையாக வேறுபடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரி அவர் எப்போது சென்னையில் இருந்து வருவார் என்று கேளுங்கள் என முதல்வர் சொன்னதும் எனக்கு போன் செய்து , சார் எப்போது புதுச்சேரி வருவீர்கள் ? என்றனர். இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவேன் , வந்ததும் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் முடித்து விடுகிறேன், முதல்வரிடம் நம்பிக்கையோடு தெரிவியுங்கள் என்றேன். டிசம்பர் 17 ஆம் தேதி எனது மகள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.புதுச்சேரி வந்ததும் உடனடியாக தடை பட்ட காலண்டர் ஓவிய பணியினை ஆரம்பித்தேன் 6 நாட்களுக்குள் முழுமையாக எல்லா திட்டங்களுக்கான ஓவியங்களும் முடிந்ததும், ஒரே வாரத்தில் புதுச்சேரி அரசு அச்சக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காலண்டரின் அச்சு வேலைகளை இரவு பகல் பாராது பணியாற்றி முடித்தனர். 2006 ஜனவரி முதல் தேதி புதுவை அரசு காலண்டரை வெளியிட்டது.அந்த காலண்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டிசம்பர் மாதம் வந்ததும் அந்த பணியின் நினைவுகள் வந்தது , 2006 , டிசம்பர் மாத பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூண்று சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கும் காட்சியை வரைந்திருந்தேன். அரசு திட்டங்களை ஓவியமாக வ்டிவமைக்கப்பட்ட காலண்டர் பற்றிய செய்தியை இந்து ஆங்கில நாளிதழும் ,மாலைமலர் நாளிதழும் விரிவாக செய்திகளை வெளியிட்டு இருந்தன. அந்த காலண்டரின் கடைசி பக்கத்தினை அன்பு நண்பர்களிடம், பகிர்ந்து கொள்கிறேன்.

புதுவை அரசு காலண்டர்-2006