Tuesday, January 28, 2014

ஆண்டாள் 

ஓவியர்.ராஜராஜன்.


ஆண்டாள் 

வாரண மாயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரண நாட்டக் கனாக்கண்டேன் தோழீ ! நான்.........

மத்தளங் கொட்ட வரிச்சங்க நின்றூத
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ ! நான்......

குங்குமம் மப்பி குளிர்சாந்த மட்டித்து,
மங்கல வீதி வலஞ்செய்து மணநீர்
அங்கவனோடு முடன்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ ! நான்......... 

என அப்பேதை புலம்புகிறாள், 
கனவு மெய்படுமா?
காலம் கனியுமா? அவனை அடைதல் நிஜம்தானா?
..அவனின் ஸ்பரிசம் குறித்த அளவற்ற ஐயம் வாட்டி எடுக்கிறது.தோழிகளிடம் கேட்க முடியாத சங்கடமாக சந்தேகங்கள் பல,
எதுவும் அரியாத அவளுக்கு குறைந்த பட்சம் அன்பு குழைந்த முத்தம் எத்தகையது என்றாவது அறிய ஆவல்தான், ஆனால் யாரிடம் கேட்பது, வெட்கம் வேறு !துணிவை தடுக்கிறது.

பொறிதட்டியதைப்போல வந்தது புதிய சிந்தனை ,ஆம் வெண்சங்கு .அதுதானே அவனின் இதழ்பதித்து அன்டசராசரங்களுக்கு திருத்தகவல் அருளும் திருப்பொருள். சங்கடம் பார்காது சங்கிடம் கேட்டால் அது யாரிடமும் சொல்லாது அன்றோ !அதனிடம் கேட்டால் எம்பெருமானின் இதழ்சுவை பற்றி அறியலாமே என்றவளாய்,கேட்க துணிந்தாள்.

கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ ?
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே !

எத்தகைய உளவியல் உன்னதம், தமிழ் மொழியின் இனிமை மாறாத தீஞ்சுவை விருந்தாக ஆழ்வார்களின் பாசுரங்கள்.
எனது நண்பர் திரு.செல்வமணியை கடந்த வாரம் சந்தித்தபோது அவரது கையில் நாலாயிர ப்ரபந்தம்.நாச்சியார் திருமொழி பற்றி நிறைய பேசினோம். புதுச்சேரி வந்ததும் முதல் வேலையாக என்னிடம் இருந்த நாலாயிர ப்ரபந்த புத்தகத்தின் சில பகுதிகளை பார்த்தேன் தமிழும் ,இனிமையும்,பொருட்சுவையும்,கற்பனையும் கலந்த ஒன்றாக பாசுரங்கள், அது எனக்கு தந்த மகிழ்ச்சிதான் இந்த கோட்டோவியம். என் ஆர்வம் பக்திக்குறியதல்ல. அழகு தமிழின் விழுமியம் சார்ந்தது. 

இவ்வனுபவத்தை இந்த கோட்டோவியத்துடன் அன்பு நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment