Thursday, January 23, 2014

அகத்தியர் சிற்பம்.
ஓவியர்.ஆர்.ராஜராஜன்.

அழகு மிக்க அகத்தியர் கருங்கற் படிமம். இது நாகப்பட்டிணம் மாவட்டம் ,செம்பனார்கோவில் அருகில் உள்ள "புஞ்சை" என வழங்கப்படுகின்ற திருநனிப்பள்ளி கிராமத்தில் உள்ள நற்றுணையப்பர் திருக்கோவிலின் தென்புறம் அமைந்துள்ளது.இக்கோவிலின் சிறப்புக்களில் முக்கியமானது கோவில் விமானம்.கருவரையில் உள்ள சிவலிங்கத்தின் மீது பூச்செரிய யானை உள்புறம் சென்று சுற்றி வரும் அளவிற்கான பிரம்மான்டமான அளவினைக்கொண்டது. அந்த பரப்பளவிற்க்கான கருவறைக்கு மேல் எழுப்பப்பட்ட விமானம் தமிழகத்திலேயே பெரியதென கூறப்படுகிறது.இக்கோவிலின் சுற்றுப் புறங்களில் உள்ள சுவர்களில் காணப்படும் கல்வெட்டுக்களின் நேர்த்தி அரிதானது. அத்துடன் சுற்றுப்புற சுவர்களில் காணப்படும் சிற்பங்கள்,மற்றும் தூண் அலங்காரங்கள் மிக தரமானது மட்டுமல்ல ,அரிதானது. சிற்பங்கள் மட்டும் பல்லவர் கால பாணியை நினைவு படுத்துகின்றன. இக்கோவிலின் அமைப்பு பல அரசர்களின் ஆட்சிகளில் ஏற்பட்ட திருப்பணிகளை உணரமுடிகிறது.
கோவிலின் உட்புறத்தில் அர்த்தமண்டபம் அருகே வாசலில் காணப்படும் துவாரபாலகர்கள் சிற்பங்கள் அற்புதமானவை. அவர்களின் கரங்களில் உள்ள ஆயுதங்கள் நிஜமான இரும்பில் வடிக்கப்பட்டதை போன்ற அபார செய் நேர்த்தி வியப்பை தருகிறது.
இந்த படத்தில் காணப்படும் அகத்தியர் சிற்பத்தினை பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆம் கருங்கல்லில் மேதமை மிக்க கலையாகம்.
இவை தவிர தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்வரர் வினாயகர் போன்ற சிற்பங்கள் சோழர்களுக்கு முந்தைய கலைப்பாணியை கொண்டதாக தெரிகிறது.
இத்திருக்கோவில் அமைந்துள்ள கிராமம் தான் திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மை பிறந்த தலம்.
பராந்தக சோழனால் கோவில் புதுப்பிக்கப்பட்டு இருந்தாலும், சுமார் 1400 வருட பழமை கொண்டது.சித்திரை மாதம் 7 லிருந்து 13 ஆம் தேதிவரை சூரிய பூசை நடை பெற்று வருவது இக்கோவிலின் சிறப்பு. ஆம் இந்த நாட்களில் காலை சூரியஒளி நேராக கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது விழுவது சிறப்புகளில் ஒன்று . கடந்த 2012 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி இக்கோவிலுக்கு நானும் எனது நண்பர் திரு அனீபாவும் சென்றோம், கோவிலின் கட்டுமானத்தையும்,சிற்ப அழகையும் கண் குளிர ரசித்தோம். கோவில் அர்ச்சகர் எங்களோடு இருந்து கோவிலை காண உதவினார்.இனிமையான நாள்.



அகத்தியர் சிற்பம்-   நற்றுனையப்பர் திருக்கோவில் ,திருநனிப்பள்ளி.

No comments:

Post a Comment