Wednesday, January 22, 2014



ஓவியப் பேராசிரியர்  திரு.சீ.ரெங்கராஜன்.




எனது ஆசிரியர்கள் அனைவரும் இன்றும் எனது உள்ளத்தில் நிறைந்து இருப்பவர்கள். அவர்களில் சில ஆசிரியர்களையும்,பேராசிரியர்களையும் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் 33 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியப் பேராசிரியராக பணியாற்றி 2010 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று கும்பகோணத்தில் வசிக்கும் திரு.ரெங்கராஜன்மாஸ்டர் அவர்களை பற்றிய சுருக்கமான பதிவு இங்கே.

போற்றுதலுக்குறிய பேராசான் திரு.சீ.ரெங்கராஜன் அவர்கள், கும்பகோணம் அரசினர் கவின் கலைக் கல்லூரியில் கடந்த 33 ஆண்டு களுக்கு மேலாக பணி புரிந்து பல நூறு மாணவர்களுக்கு ஓவியக்கலை பாடத்தை பாங்குற பயிற்றுவித்து வளமிக்க மாணவர்களை வளர்த்தெடுத்த ஆசான்.தங்கு தடையற்ற போதனைத்திறனும்,அறிவு சார்ந்து மாணவர்களிடம் அனுகும் விதமும் இவரின் மகத்தான பண்புக்குரியது,அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமைக்குரியது.
"மாஸ்டர்" என மாணவர்களால் அழைக்கப்படும் திரு.ரெங்கராஜன் அவர்கள் ஓவிய குரு ! ஞானம் கமழும் சுவீகரிப்பும்,அன்பு செரியும் கண்களும் , பொன் நிறமும் கொண்ட அழகிய தோற்றம் அவருடையது. அதிர்ந்து நடக்காத , அதட்டி பேசாத பண்பாளர். கோபிக்காமலே மாணவர்களை நெறிப் படுத்தும் இயல்பு ,இயற்கை அவருக்கு அளித்த வரம். இவரது கலை வாழ்வின் பயணம் தெளிந்த நீரோடையை போன்றது. என்றும் மாறாத தனித்தன்மையோடு இயங்கி வந்த இவரின் இயல்பு வளம் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்ற மாணவர்களால் மறக்க கூடியதல்ல.

தனது மாணவர்களின் மேன்மையையும் , வளர்ச்சியையும் மட்டுமே தனது இலக்காக கருதிய காரணத்தால் தன் விருப்பங்கள் மீது, இவர் கவனம் செலுத்தவே இல்லை. பரிசுத்தமான ஆசிரியத்தின் இலக்கனமாக மதிக்கப்படும் இவரது அக ,புற வாழ்வு கூட வேறு பாடற்றதாக உணரமுடிகிறது.

திரு.சீ. ரெங்கராஜன் எனும் அற்புத மனிதர் 1952 - ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனே யில் பிறந்தவர். தந்தையார் திரு. A.G. சீனிவாசன். தாயார் ஜென்பகலக்ஷ்மி. இவ்விருவரும் பூர்வீகமாக கும்பகோணத்தை சேர்ந்தவர்கள். திரு.A.G.சீனிவாசன் அவர்கள் இராணுவத்தில் ஓய்வூதிய கணக்கு அதிகாரியாக இருந்தார். இவர் புனே யில் தங்கி இருந்த போது திரு.ரெங்கராஜன் பிறந்தார். சில ஆண்டுகளில் இவர்கள் புனேயில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு மூன்று ஆண்டுகள் ஆரம்ப பள்ளியும்,அதன் பின் மும்பைக்கு இடமாற்றமும் ஆனதால் , முமபையில் 4 ,5 -ம் வகுப்புகளை பயின்றார். 1960 க்கு பிறகு இவர்களது குடும்பம் சென்னைக்கு வந்தது. 10 வயதுக்குள் மூன்று மாநிலங்களில் இருந்ததால், மராத்தி, இந்தி ,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளின் பரிட்சயத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.அப்போது நாடகத்துறையிலும், சினிமாவிலும் புகழ் பெற்ற திரு. T.K. பகவதியின் மகனும், நடிகர்.திரு.கமலஹாசனும் இவருடன் அந்த பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.

அப்போது ஓவியக்கலை மீதான ஒருவித ஈடுபாடு இவருள் வளர ஆரம்பித்தது. இது ஒருவகையில் இவரின் தந்தையார் திரு. சீனுவாசன் அவர்களிடமிருந்த ஓவியக் கலைக்கூட காரணமாக இருக்கலாம். அதன் பிறகு 7ஆம் வகுப்பு முதல் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள M.C.T. முத்தையா செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். பின் இவரது ஆசிரியர் திரு.சங்கர் என்பவரின் வழிகாட்டுதலில் ஓவியம் பயில சென்னை கலைத்தொழில் கல்லூரியில் சேர்ந்தார்.

அடக்கமும், நற்பண்புகளும் நிறைந்திருந்த திரு.ரெங்கராஜன் அவர்கள், திரு. ஏ.பி. சந்தானராஜ் , திரு.எல்.முனுசாமி, திரு.அந்தோனி தாஸ், திரு. அல்போன்ஸோ அருள்தாஸ், திரு.சண்முக சுந்தரம், திரு. எஸ் .கோபால் , திரு.ஆர்.பி. பாஸ்கரன் , திரு.கே.சீ.நாகராஜன் போன்ற ஆசிரிய பெருமக்களின் வழி காட்டுதல்களோடு வாஞ்சையோடு வளர்த்தெடுக்கப்பட்டார். இளம் பருவத்தில் பெற்றிருந்த மொழிவளம் ஓவியக் கலையில் தத்துவார்த்த தடத்தினூடே பயணிப்பதற்கு பேருதவியாக அமைந்தது. சென்னை கவின் கலைக் கல்லூரியின் நூலகம் மற்றும் ஆசிரிய பெருமக்களின் அனுபவ ஆற்றல் களம் திரு.ரெங்கராஜனின் ஓவிய பயிற்சிக்கு உலைக்களமாக விளங்கியது.

1977-78 ல் கும்பகோணம் அரசினர் கலைத் தொழில் கல்லூரிக்கு பயிற்றுனராக நியமிக்கப்பட்டார். தனது ஓவியப் பாதையை தீர்மானிக்க தொடங்கிய நெடிய பயணத்தில் தனக்கும் தன்னை பின் பற்றும் மாணவ சமூகத்துக்கும் உரிய தொடர்பின் எல்லை வேறுபாடுகளை கடந்தவாறு அமைத்துக்கொண்டார்.

இவரது ஓவியங்கள் அரூப நிலையில் ( ABSTRACT ) தொடங்கி படிப்படியாக பல பரிமாணங்களையும் கொண்டு இந்திய மரபு சார்ந்த ,பாரம்பரியச் செரிவு கொண்ட அடையாளங்களால் புனையப்பட்டது. அவை உருவ குறியீடுகளாய் மட்டுமே அல்லாமல் ஆழமான தத்துவக் கூறுகளை உள்ளடக்கிய பரிமாண நிலையை அடைந்தது.

பொதுவாக ஓவியக் கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் கட்டோவிய வளத்துடன் , உருவப்படங்களை ( Portraits ) தீட்டும் ஆற்றல் வாய்ந்தவர்களுக்கென்று மாணவகளிடம் ஒருவித மதிப்பு இருப்பதுண்டு. திரு.தனபால் மாஸ்டர், திரு. அந்தோனிதாஸ் மாஸ்டர், திரு. அல்போன்ஸோ மாஸ்டர் போன்றவர்களுக்கு பின் தரமான போர்ட்ரைட்களை மாணவர்களுக்கு வரைந்து காட்டி பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக திரு.ரெங்கராஜன் அவர்கள் திகழ்ந்தார். இவரின் தூரிகை தீண்டல்களில் அன்றைய கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாடல்களான அபிஷேகப் பத்தர், சிதம்பரம் மாடல் போண்றோர்களும் ,மாணவர்கலில் சிலரும் உயிரோட்ட மிக்க ஓவியங்களாக உரு பெற்றனர். ஓவியக்கலை தவிர யோகக்கலை, ஆன்மீகம், உளவியல் , தத்துவம் போண்றவற்றிலும் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த திரு.ரெங்கராஜன் அவர்களின் எந்த ஒரு அனுகு முறையும் அறிவு சார்ந்த பல பரிமாணங்களை கொண்டதாக இருந்தது. எந்த சூழலிலும் மாணவர்களின் ஐயங்களை தெளிவு படுத்தும பண்பு கொண்டவராக திகழ்ந்தார்.

" எனது 33 ஆண்டுகால ஆசிரியர் பணியில் நான் தினந்தோறும்.முதலாமாண்டு மாணவனாகவே கருதிவந்தேன். தினம்தோறும் கற்றுக் கொண்டு வருகிறேன். மாணவர்களுக்கு வழிகாட்டும் நேரங்களில், மாணவர்களிடமிருந்தும் கற்று வருகிறேன்"
என தனது குறுஞ்சரிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

" மாணவர்களிடமிருந்தும் கற்று வருகிறேன் " என்ற வரிகள் மூலம் தான் ஒரு மேதமை நிறைந்த குரு என்பதை பணிவாகவே உணர்த்துகின்றார். சிறந்த "குரு" ஓர் வரம் ,சிறந்த குருவை அடைவது அதை விட பெறும் பேறு என்பதை அவரிடம் பயின்ற மாணவர்கள் அறிவார்கள்.தனது இயல்பான வாழ்வியல் தடத்தில் பயணித்து வந்த அவரின் தனித்துவமிக்க ஆசிரியர் தொண்டு அளப்பரியது,கடந்த 30 ஆண்டுகளில் நாங்கள் அறிந்திருந்த திரு.சீ.ரெங்கராஜன் மாஸ்டரின் வளமிக்க புலமையும்,பண்டித்துவமும் எளிதன்று. தனது ஆசிரியர்கள் அனைவரிடமிருந்தும் வெவ்வேறான ஓவிய உத்திகள் ,பரிசோதனைகள்,நுட்பங்கள் போன்றவற்றை அறிந்திருந்தும்,தனது தனித்தன்மைகள் மூலம் மென்மை மிகு மேதமை ஸ்பரிசத்தை மாணவனின் உள்ளத்துக்குள் ஊடுருவி போதிக்கும் நுட்பத்தை யோகக்கலை அவருக்கு அளித்திருந்தது.

இன்று, திரு .ரெங்கராஜன் அவர்களின் மாணவர்களில் பலர் மத்திய, மாநில அரசு பணிகளிலும் ,தனியார் நிறுவனங்களிலும், வெளி நாடுகளிலும் நல்ல நிலையில் பணியாற்றி வருகின்றனர். சென்னை, கும்பகோணம்,புதுச்சேரி ஆகிய ஊர் களில் உள்ள ஓவியக் கல்லூரிகள், மற்றும் தமிழ்நாட்டின் இதர கல்லூரிகள், அரசு பள்லி களிலும் ஆசிரியர்களாக திகழ்ந்து வருகின்றனர்.அவரது கலைத்திறன் அவரது மாணவர்கள் வாயிலாக எதிர் காலத்தின் புதிய தேடலை நோக்கி பயணிப்பதை நாங்கள் உணர்கிறோம்.


கடந்த 31.13.2010 அன்று அவர் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெறும் தினத்தன்று அவரது முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவின் போது அவரது கலை வாழ்வு குறித்த இந்த சிறு தொகுப்பை நான் எழுதி அதை புதுச்சேரியில் அச்சிட்டு அன்றைய தினம் கும்பகோணத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பாக வெளியிட்டோம். அந்த பகுதியை அன்பு நண்பர்களுக்கும் ,கலை ஆர்வலர்களுக்கும் பகிர்ந்து கொள்கிறேன் - ஓவியர்.ஆர்.ராஜராஜன், புதுச்சேரி.

No comments:

Post a Comment